காட்டுப்பகுதியில் ரத்தக்காயங்களுடன் இறந்துகிடந்த 6 வயது சிறுமி: பதைபதைக்கும் காட்சி!

Report Print Vijay Amburore in இந்தியா

பெற்றோருடன் திருமண நிகழ்விற்கு சென்ற 6 வயது சிறுமி, காட்டுப்பகுதியில் இரத்தக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி சித்தா ரெட்டி, உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தன்னுடைய மனைவி மற்றும் 6 வயது மகள் வர்ஷினியுடன் சென்றுள்ளார்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை மாலை முடிந்த நிலையில், இரவு 9.45 மணி வரை உறவினர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி, 10 மணியளவில் மாயமாகியுள்ளார். இதனை அறிந்த உறவினர்கள் அக்கம்பக்கம் முழுவதும் தீவிரமாக தேட ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை 6.45 மணியளவில் திருமண மண்டபம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் சிறுமி சடலமாக கிடப்பதை பார்த்து உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக சம்பவம் அறிந்து விரைந்து வந்த பொலிஸார், வர்ஷினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பொலிஸார் தரப்பில் கூறுகையில், சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்ட போது ஆடைகள் களைந்த நிலையில், கை மற்றும் கால்களில் லேசான காயங்கள் இருந்தன. சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருமண மண்டபத்தின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, மர்ம நபர் ஒருவர் சிறுமியை இரவு நேரத்தில் வெளியில் அழைத்து செல்வது பதிவாகியுள்ளது. அந்த நபரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை. தீவிர நடவடிக்கை மேற்கொண்டு விரைவில் கைது செய்யப்படுவார் என தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் சிறுமியின் உறவினர்கள், வர்ஷினி துஸ்பிரயோகம் செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்