சாப்பிடும் உணவில் எதையோ கலக்கிறார்கள்... சிறையில் உள்ள முருகனுக்கு நடப்பது என்ன?

Report Print Raju Raju in இந்தியா

வேலூர் சிறையில் இருக்கும் முருகன் மீண்டும் உண்ணாவிரதம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன் மற்றும் நளினி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 18ஆம் திகதி முருகன் இருக்கும் அறையில் நடத்தப்பட்ட சோதனையில் ஆண்ட்ராய்டு போன் கிடைத்ததாக கூறி அவர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணைக்காக கடந்த 31ஆம் திகதி நீதிமன்றத்தில் முருகன் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது செய்தியாளர்களிடம், சிறையில் என்னை கொடுமைப்படுத்துகிறார்கள்.

இலங்கையில் உள்ள என் தந்தையின் உடல்நிலை மோசமாக உள்ளது. சிகிச்சைக்காக அவர் தமிழகம் அழைத்துவரப்படுகிறார். அவரை அருகில் இருந்து கவனித்துக் கொள்வதற்காக நளினியும் நானும் பரோல் கேட்டு விண்ணப்பித்தோம்.

அதைத் தடுக்கத் தான் சிறை அதிகாரிகள் இப்படிச் செய்கிறார்கள் என குமுறினார். இதையடுத்து, சிறையில் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார்.

மேலும் கணவருக்கு நடக்கும் கொடுமைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நளினியும் உண்ணாவிரதம் இருந்தார். பின்னர் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் முருகன் உண்ணாவிரதத்தை கைவிட்டார்.

இந்நிலையில் மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கிய முருகன் இன்றுடன் நான்கு நாட்களாக எதுவும் சாப்பிடவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து, முருகனின் வழக்கறிஞர் புகழேந்தி கூறுகையில், முருகன் தந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் இரண்டரை மாதமாக பரோல் கேட்கிறார்.

அவருடைய ஆன்மிக வாழ்க்கையைச் சிதைக்கும் வகையில் கடந்த சனி, ஞாயிறு அன்று கொடுத்த உணவில் எதையோ கலந்திருந்ததாகவும் முருகன் கூறுகிறார்.

தற்போது சிறைத் துறையினர் கொடுக்கும் உணவை அவர் எடுத்துக்கொள்வதில்லை.

இதோடு வேலூர் சிறையில் பாதுகாப்பு இல்லாத காரணத்தினால், சென்னை புழல் மத்திய சிறைக்கு மாற்றுமாறு சிறை அதிகாரிகளிடம் முருகன் மனு கொடுத்திருக்கிறார் என கூறியுள்ளார்.

இந்த சூழலில், முருகன் உண்ணாவிரதம் இருக்கவில்லை எனவும், இது தொடர்பாக சிறை விதியை மீறி வேறு தகவல்களை கூற முடியாது எனவும் சிறைதுறை சார்பில் கூறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்