மாணவி பாத்திமா உள்ளிட்ட 9 பேரின் திடீர் தற்கொலைகள்! எதற்காக உயிரை மாய்த்தனர்? அதிரவைக்கும் தகவல்

Report Print Raju Raju in இந்தியா

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் இங்கு கடந்த 2016 முதல் இதுவரை கடந்த 3 ஆண்டுகளில் 9 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.

கேரளாவை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி, சென்னை ஐஐடியில் முதலாமாண்டு முதுகலை படிப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று விடுதி அறையில் பாத்திமா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தனது தற்கொலைக்கு உதவி பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் என்பவர் தான் காரணம் என அவரது செல்போனில் ஆங்கிலத்தில் பதிந்து வைத்திருந்தார்.

மேலும் இரண்டு பேராசிரியர்களின் பெயர்களையும் குறிப்பிட்டிருந்த மாணவி, அவர்கள் தன்னை துன்புறுத்தியதாகவும் அந்த பதிவில் கூறியிருந்தார்.

இந்நிலையில் சென்னை ஐஐடியில் கடந்த 3 ஆண்டுகளில் 9 பேர் தற்கொலை கொண்டுள்ளனர்.

இதில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் மட்டும் 2 பேர். மலப்புரத்தைச் சேர்ந்த ஷாகுல் கோர்நாத் என்ற மாணவர் 2018ம் ஆண்டு ஐஐடியில் தற்கொலை செய்து கொண்டார்.

ஷாகுல் அட்டென்டென்ஸ் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.

2019ம் ஆண்டு மட்டும் சென்னை ஐஐடியில் இதுவரை 3 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த எம்டெக் மாணவர் கோபால் பாபு என்பவர் தற்கொலை செய்தார்.

மனஅழுத்தம் காரணமாக இவர் தற்கொலை செய்து கொண்டதாக பொலிசார் கூறியிருந்தனர். அடுத்து ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சனா குமாரி என்பவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்தார். ரஞ்சனா குமாரி மரணத்துக்கான காரணம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.

ஆனால் அவர் துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் பரவின.

அவரது மரணம் இன்று வரை மர்மமாகவே உள்ளது. இதேபோல 2018ம் ஆண்டு டிசம்பர் மதாம் அதிதி சிம்ஹா என்ற உதவிப் பேராசிரியர் தற்கொலை செய்து கொண்டார். குடும்பப் பிரச்சினை காரணமாக இவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இவர் இயற்பியல் துறையைச் சேர்ந்தவர்.

இதுதவிர ஒரு ஆய்வு மாணவர், 2 பட்டதாரி மாணவர்கள், ஒரு ஊழியரின் மனைவி ஆகியோரும் சென்னை ஐஐடியில் 2016ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இவர்களின் தற்கொலைகளுக்கு வெவ்வேறு காரணம் இருந்தாலும் கூட அடுத்தடுத்த தற்கொலைகள் ஏன் என்பது தான் தற்போது விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்