சென்னையில் ஃபாத்திமா... திருச்சியில் ஜெப்ரா பர்வீன்: உலுக்கும் கல்லூரி மாணவிகள் தற்கொலை

Report Print Arbin Arbin in இந்தியா

சென்னையில் ஐ.ஐ.டி மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி அடங்குவதற்குள் திருச்சியில் ஜார்க்கண்ட் மாநில மாணவி ஜெப்ரா தற்கொலை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் திருச்சியில் உள்ள கே.சாத்தனூர் பகுதியில் அமைந்துள்ளது அய்மான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இங்கு, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில மாணவிகள் படித்து வருகின்றனர்.

குறித்த கல்லூரியில் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த மாணவி ஜெப்ரா பர்வீன், கல்லூரி வளாகத்திலுள்ள விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு அறிவியல் பாடப் பிரிவில் உணவியல் துறை படித்துவந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று காலை அவர் தங்கியிருந்த அறை எண் 100-ல் தூக்கில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சக மாணவியின் சடலத்தை நேரில் பார்த்து பதறிய மாணவிகள் மற்றும் கல்லூரி நிர்வாகம் அளித்த தகவலை அடுத்து விரைந்து வந்த பொலிசார் மாணவியின் சடலத்தை கைப்பற்றியுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், தற்கொலை செய்துகொண்ட மாணவி பாடசாலைக் கல்வி வரை இந்தியில் படித்ததாகவும். தற்போது கல்லூரிப் பாடங்கள் ஆங்கில வழியில் நடத்துவதால்,

அவர் பாடங்களைப் புரிந்துகொள்ள முடியாமல் சிரமப்பட்டார் எனவும் அதன்காரணமாகவே தற்கொலை செய்துகொண்டதாகவும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆனால், விடுதி காப்பாளர் உளவியல் ரீதியாக அவருக்கு தொல்லை அளித்ததால், மனமுடைந்த மாணவி தற்கொலை செய்துகொண்டார் என்று திடுக்கிடும் தகவல்கள் கல்லூரி மாணவர்களிடையே பரவி வருகிறது.

கல்லூரி வளாகத்துக்குள் மாணவிகள் செல்போன் பயன்படுத்தக் கூடாது. ஆனாலும், விடுதியில் தங்கியிருக்கும் மாணவிகள் செல்போனை மறைத்து வைத்துப் பயன்படுத்துகிறார்கள்.

மாணவி ஜெப்ரா பர்வீனும் செல்போன் பயன்படுத்தினார். இது அவரின் பெற்றோருக்கும் தெரியும். இதனைடையே மாணவி ஜெப்ரா செல்போன் பயன்படுத்தியதை அவரது அறையில் தங்கியிருக்கும் 7 மாணவிகளில் ஒருவர் விடுதி காப்பாளரிடம் போட்டுக்கொடுத்துவிட்டார்.

உடனே மாணவி ஜெப்ராவை தனது அறைக்கு அழைத்த காப்பாளர், மிக மோசமாகத் திட்டியதுடன், சகமாணவிகளின் முன்னிலையில் அவரை அசிங்கப்படுத்தினார்.

இதனால் மனமுடைந்த மாணவி ஜெப்ரா, அவருடன் அறையில் தங்கியிருக்கும் தோழிகளில் ஒருவரான ஜார்க்கண்ட் மாநில மாணவி ஆதிபாவிடம் சொல்லி அழுதுள்ளார்.

இந்த நிலையில், அடுத்தநாள் காலை 6.30 மணியளவில் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தற்போது ஜெப்ரா பர்வீனுக்கு உடல்நிலை சரியில்லை என்றே கல்லூரி நிர்வாகம் அவரின் பெற்றோரை ஜார்க்கண்டிலிருந்து வரவழைத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இறந்த மாணவி உடலை ஜார்க்கண்ட் கொண்டு சென்றால் பிரச்னை உருவாகலாம் என்பதால் திருச்சியிலேயே அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்