இலங்கையில் இராணுவத்தினர் குவிப்பு... தமிழ் பெயர்கள் அழிப்பு! ஸ்டாலின் வேதனையுடன் வெளியிட்ட அறிக்கை

Report Print Santhan in இந்தியா

இலங்கையில் தமிழர் பகுதியில் இராணுவம் குவிக்கப்பட்டதற்கும், தமிழ் பெயர்களை அழிப்பதற்கும் திமுக தலைவர் ஸ்டாலின் கண்டம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகள் உட்பட பல இடங்களில் பாதுகாப்பு மற்றும் பொது அமைதியை ஏற்படுத்த, ஆயுதம் ஏந்திய ராணுவப்படையினர் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பணியில் ஈடுபடும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ சட்டத்தை பிறப்பித்தார்.

இதைத் தொடர்ந்து கொழும்புவின் புறநகர் பகுதியில் இருக்கும் தமிழ் பெயர்கள் கொண்ட பலகைகள் மர்மநபர்களால் அழிக்கப்பட்டிருந்தது. அது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகின.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,இலங்கையில் தமிழர் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினர் இனிமேல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவார்கள் என்று அறிவித்துள்ளதும் தமிழர் பகுதிகளில் உள்ள தெருக்களின் தமிழ்ப் பெயர்களை அழிப்பதற்கும், கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்வதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவிப் பொறுப்பேற்ற ஈரம் காய்வதற்குள், தமிழர்களின் இதயங்களை காயப்படுத்தி, அவர்களின் கண்ணியத்தை குறைக்கும் பணி வேகமாக துவங்கி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் அப்பாவி மீனவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து இருப்பது உலகத் தமிழர் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளதாகவும் ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு வாக்களித்தவர்கள் வாக்களிக்காதவர்கள் என வேறுபடுத்தி பார்க்காமல் அனைவரிடத்தும் சமமாக நடந்து கொள்வேன் என கோட்டாபய ராஜபக்‌ஷ அளித்த வாக்குறுதியை நினைவு கூறவும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த நெருக்கடியை உன்னிப்பாக கவனித்து, ஈழத்தமிழர்கள் அமைதியாக, சுயமரியாதையுடன் வாழ்வதற்கு தேவையான நடவடிக்கைகளை பிரதமர் மோடி எடுக்கவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்