இந்தியாவின் பீகார் மாநிலத்தில் சிறுமி ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.
ஐதராபாத் நகரில் பிரியங்கா ரெட்டி என்ற கால்நடை மருத்துவர் லொறி சாரதி உள்ளிட்ட நால்வரால் சீரழிக்கப்பட்டு எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி அடங்கும் முன்னர்,
அதே பாணியில் பீகார் மாநிலத்தின் புக்சார் மாவட்டம் குகுதா கிராமத்தில் 16 வயது மதிக்கத்தக்க சிறுமியின் சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார், சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பியுள்ளனர்.
முதற்கட்ட ஆய்வில் சிறுமி வன்புணர்வுக்கு இரையாகியுள்ளதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
மேலும், சடலம் கிடந்த பகுதியில் இருந்து துப்பாக்கி தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. நெற்றியில் சுடப்பட்டதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. சடலத்தை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தாலும், இதுவரை குறித்த பெண் தொடர்பில் எந்த தகவலும் இல்லை என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இருப்பினும் சுற்றுவட்டார பகுதி அனைத்திலும் இந்த விவகாரம் தொடர்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும்,
கைப்பற்றப்பட்ட உடலின் மேல்பகுதி மோசமாக எரிந்த நிலையில் இருப்பதால் அடையாளம் காண்பதில் சிரமமாக உள்ளது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தற்போது விசாரணையை தொடங்கியிருப்பதாக கூறும் மாவட்ட பொலிசார், உடற்கூராய்வு அறிக்கையில் முழுமையான தகவல்கள் தெரியவரும் எனவும் தெரிவித்துள்ளனர்.