மனைவியுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே: வெளிநாட்டில் பலியான தமிழக இளைஞர் குறித்து உருக்கமான தகவல்

Report Print Arbin Arbin in இந்தியா
228Shares

சூடான் நாட்டில் தொழிற்சாலை விபத்தில் சிக்கி பலியான தமிழகத்தின் பண்ருட்டி இளைஞர் தொடர்பில் உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளது.

சூடான் தலைநகர் கார்டூமின் புறநகர் பகுதியில் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 23 தொழிலாளர்கள் உடல் கருகி பலியாகினர்.

இவர்களில் 18 பேர் இந்தியர்கள் எனவும் இதில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை சேர்ந்த இளைஞரும் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

பண்ருட்டி அருகே மானடிக்குப்பம் வடக்குத்தெருவை சேர்ந்த 35 வயதான ராஜசேகர் என்பவரே மரணமடைந்தவர்.

இவருக்கு மனைவி கலைசுந்தரி (33) மற்றும் ஷிவானி (3) என்கிற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ராஜசேகர் சூடான் நாட்டுக்கு வேலைக்காக சென்றுள்ளார்.

அங்கு நடந்த தீ விபத்தில் சிக்கி பலியாகி உள்ளார். இது பற்றி அறிந்ததும் அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.

இந்த விவகாரம் தொடர்பில் ராஜசேகரின் உறவினர் கூறுகையில், நேற்று முன்தினம் இந்திய நேரப்படி மதியம் 1 மணி அளவில் ராஜசேகர் தமது மனைவியுடன் செல்போனில் வீடியோ அழைப்பு மூலம் பேசி உள்ளார்.

பேசிக்கொண்டிருக்கும் போதே, திடீரென ராஜசேகரின் பின்னால் தீப்பிழம்பு ஏற்பட்டது. இதை பார்த்து கலைசுந்தரி அதிர்ச்சி அடைந்தார்.

அடுத்த சில நொடிகளில் வீடியோ அழைப்பும் துண்டித்து விட்டது. மீண்டும் அவருடன் கலைசுந்தரி பேச முற்பட்டபோது, சிக்னல் கிடைக்கவில்லை.

பின்னர் இந்திய தூதரகத்துக்கு தகவல் தெரிவித்தோம். அதன்பிறகு அவர்கள் அங்கு நடந்த தீ விபத்தில் ராஜசேகர் இறந்து விட்டதாக தெரிவித்தனர் என்றார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்