உடல் முழுவதும் பற்றிய நெருப்புடன் ஒரு கி.மீ ஓடிய இளம்பெண்: பயத்தில் அலறிய பொதுமக்கள்

Report Print Arbin Arbin in இந்தியா
751Shares

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் வன்புணர்வில் ஈடுபட்ட குற்றவாளிகள் நெருப்பு வைத்து கொல்ல முயன்றதை அடுத்து உயிர் தப்ப இளம்பெண் ஓடியது ஒரு கி. மீ தொலைவு என தெரியவந்துள்ளது.

கவுரா நகரில் இருந்து உன்னாவ் ரயில் நிலையம் வரை உடல் முழுவதும் நெருப்புடன் அவர் ஓடியதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இருப்பினும் உடல் முழுவதும் தீ பற்றி எரிந்த நிலையில் பெண் ஒருவர் உதவி கேட்டு அலறியபடி ஓடியதை கண்டும் பொதுமக்கள் எவரும் உதவ முன்வரவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த பகுதியில் சமையல் எரிவாயு உருளை கிடங்கு ஒன்றில் பணியாற்றும் ரவீந்திர பிரகாஷ் என்பவரிடம் சில நிமிடங்கள் அவர் உதவிக்கு கோரியுள்ளார்.

கால்நடைகளுக்கு உணவு தயார் செய்யும் வேளையிலேயே பெண்ணின் அலறல் சத்தம் கேட்டதாக ரவீந்திர பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

நெருப்புடன் பெண் ஒருவர் ஓடி அருகே வந்ததும், தாம் பேய்களை துரத்தும் மந்திரவாதியாக இருக்கலாம் என ஒருகணம் அஞ்சியதாக அவர் தெரிவித்துள்ளார்.

காப்பாற்றவும் உதவி செய்யவும் அவர் கெஞ்சியபடி இருந்தார். மேலும் கையில் இருந்த பணப்பை மற்றும் மொபைலை அவர் பத்திரமாக வைத்திருந்துள்ளார்.

அவர்கள் தம்மை கொல்ல முயன்றதாகவும் ரவீந்திர பிரகாஷிடம் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர் குறித்த இளம்பெண்ணை காப்பாற்றியதுடன், பொலிசாருக்கும் தகவல் அளித்துள்ளார்.

நாட்டை உலுக்கிய உன்னாவ் கூட்டு பாலியல் வன்புணர்வு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண் நீதிமன்றம் செல்லும் வழியிலேயே குறித்த கொலை முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்த கும்பலில் சிலர் தமது தலையை குறிவைத்து தாக்கியதாகவும் அவர் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.

தொடர்ந்து கத்தியால் தாக்கியதாகவும், பின்னர் பெட்ரோல் ஊற்றி நெருப்பு வைத்ததாகவும் அவர் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, குறித்த இளம்பெண் மீது தாக்குதல் தொடுத்த ஐவரில் மூவரை கைது செய்துள்ளதாக உன்னாவ் பொலிஸ் தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.

90 சதவிகித தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அந்தப் பெண் சிகிச்சைக்காக லக்னோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேல் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்