இலங்கை அகதிகளின் முகாம்களை பார்க்கும் போது கண்ணீர் வருகிறது... வேதனையுடன் கூறிய அமைச்சர்

Report Print Santhan in இந்தியா

இலங்கை, வங்கதேச அகதிகளுக்கான முகாம்களை பார்க்கும் போது கண்ணீர் வருவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வேதனையுடன் கூறியுள்ளார்.

இந்தியாவில் கொண்டு வரப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில், குடியுரிமை சட்டம் குறித்து சென்னை திநகரில் நடந்த கருத்தரங்கில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.

அப்போது அவர், குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என மாநில அரசுகள் சொல்ல முடியாது அவ்வாறு அமல்படுத்த மாட்டோம் என மாநில அரசுகள் சொல்வது சட்டத்திற்கு புறம்பானது. குடியுரிமை திருத்த சட்டம் என்பது குடியுரிமை கொடுக்கும் சட்டம். அச்சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்கும் சட்டம் அல்ல.

குடியுரிமை சட்டம் கடந்த 1995-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதனால் யாருக்கும் பிரச்சினை இல்லை. குடியுரிமை சட்டம்குறித்து உண்மைக்கு புறம்பாக பேசி யாரையும் கொந்தளிப்புக்குள்ளாக்க வேண்டாம்.

யாருடைய குடியுரிமை பறி போகும் என கருதுகிறார்களோ அவர்களிடம் தெளிவாக விளக்குவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகிய இரண்டிற்கும் குடியுரிமை சட்டத்திற்கும் சம்பந்தமே இல்லை.

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினாலும் எந்த பிரச்சினையும் இல்லை. இலங்கை, வங்கதேச அகதிகளுக்கான முகாம்களில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை.

அந்த முகாம்களுக்கு சென்று பார்த்தால் கண்ணீரை வரவழைக்கிறது. அஸ்ஸாமில் அமல்படுத்தப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு வேறு எந்த மாநிலத்திலும் கொண்டு வரப்படாது. அது நீதிமன்ற உத்தரவின் பேரில் நடக்கிறது என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers