விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் சிக்கிய விவகாரம்: வெளிவரும் பின்னணி தகவல்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்திய மாநிலம் கர்நாடகாவில் உள்ள விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் சிக்கிய விவகாரத்தில் கைதான நபர் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் சிக்கிய விவகாரத்தில் பெங்களூரு பொலிசாரிடம் நேற்று ஆதித்யா ராவ் என்ற இளைஞர் சரணடைந்துள்ளார். அவரை பொலிசார் மங்களூரு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆதித்யா ராவ் பொறியியல் பட்டதாரி மட்டுமின்றி எம்.பி.ஏ. பட்டதாரியும் ஆவார். ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கும், சிட்டி ரெயில் நிலையத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதில் சிக்பள்ளாப்பூர் சிறையில் 9 மாதம் சிறைவாசம் அனுபவித்த பின்பு கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் வெளியே வந்திருந்தார்.

இதனையடுத்து கடந்த ஒரு மாதமாக மங்களூருவில் உள்ள ஒரு ஹொட்டலில் அவர் வேலை செய்துள்ளார். தான் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காத விரக்தியில் விமான நிலையங்களுக்கு மிரட்டல் விடுப்பது உள்ளிட்ட சிறுசிறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த அவர், தற்போது விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்தது தொியவந்துள்ளது.

இதற்காக ஒன்லைன் மூலம் வெடிகுண்டு தயாரிக்க தேவையான பொருட்களை வாங்கியுள்ளார். யூடியூப் மூலம் வெடிகுண்டுகள் தயாரிப்பது எப்படி? என்பதை அறிந்து கொண்டுள்ளார்.

அதன்மூலம் கிடைத்த தகவல்கள் அடிப்படையில் வெடிகுண்டு தயாரித்ததும், வெடிகுண்டு தயாரித்தபோது அவரது கையில் காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அவர் எதற்காக மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டுகளை வைத்தார்? இந்த சம்பவத்திற்கு பின்னால் வேறு யாரும் உள்ளார்களா? போன்றவை குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே கைது செய்யப்பட்ட ஆதித்யா ராவுக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர்.

இது தொடர்பாக அவரது சகோதரர் அக்‌ஷத் ராவ் கூறுகையில், ‘ஆதித்யாராவ் எனது மூத்த சகோதரர். கடந்த முறை அவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தபோது அவருக்கு அறிவுரை கூறினோம். ஆனால் அவர் கேட்கவில்லை. இதனால் அவரை வீட்டில் இருந்து வெளியேற்றிவிட்டோம்.

அவருடன் நாங்கள் எந்த தொடர்பிலும் இல்லை. அவருடைய செயலுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது. கடந்த 2 ஆண்டுகளாகவே நாங்கள் அவருடன் தொடர்பில் இல்லை. அவரிடம் இருந்து பிரிந்துதான் நாங்கள் வாழ்கிறோம்’ என்று தெரிவித்தார்.

விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கில் பொறியியல் பட்டதாரி கைது செய்யப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers