கர்ப்பிணி மகளை கடத்தி சென்று ஆசிட் வீசிய தந்தை!

Report Print Vijay Amburore in இந்தியா

திருவள்ளூர் மாவட்டத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட மகளை கடத்தி சென்று ஆசிட் வீசி தாக்குதல் நடத்திய முன்னாள் தலைமைக்காவலரை, பொலிஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த பாலாஜி மற்றும் பாக்கியலட்சுமி என்கிற தம்பதியினர் மகன் சாய்குமார் (24), சென்னையில் தங்கி வேலை செய்துவந்த போது, தீபிகா என்கிற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் 6 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்த விவகாரத்தை அறிந்துகொண்ட தீபிகாவின் தந்தையும், விருப்ப ஓய்வுபெற்ற முன்னாள் தலைமைக்காவலருமான பாலகுமார், அங்கிருந்து வீட்டை காலி செய்து திருத்தணிக்கு சென்றுள்ளார்.

அங்கு தனியார் கல்லூரியில் படித்து வந்த தீபிகா கடந்த ஜூன் மாதம் வீட்டைவிட்டு வெளியேறி, பெங்களூரில் சாய்குமாரை திருமணம் செய்துள்ளார்.

Deepika (Credits: Dinamani)

2 மாதங்களுக்கு பின்னர் மீண்டும் சொந்த ஊருக்கு இருவரும் திரும்பியுள்ளனர். இந்த நிலையில் 5 மாத கர்ப்பிணியாக சாய்குமாரின் வீட்டில் இருந்த தீபிகாவை காண, பாலகுமார் அவர்களுடைய வீட்டிற்கு சென்றுள்ளார்.

வீட்டில் ஆள் இல்லாத சமயம் பார்த்து உள்ளே வந்த அவர், அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். அதற்கு தீபிகா மறுப்பு தெரிவித்ததால், அவருடன் வந்த 4 பேர் வேகமாக தீபிகாவின் முகத்தில் ரசாயன பவுடர் கலந்த அமிலத்தை பூசியுள்ளனர்.

Sandhiya, bhagyalakshmi (Credits: Dinamani)

இதனை தடுக்க வந்த தீபிகாவின் மாமியார் பாக்கியலட்சுமி மற்றும் கர்ப்பிணியாக இருந்த மற்றொரு மருமகள் சந்தியா முகத்திலும் பூசியுள்ளனர்.

பின்னர் தீபிகாவை அவர்கள் வந்த காரிலே கடத்தி சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சாய்குமாரின் தந்தை பாலாஜி செவ்வாய்பேட்டை காவல்நிலையத்தில் புகாரளித்தார். தகவல் அறிந்த பாலகுமார் தனது மகளை, வேப்பம்பட்டு மெயின்ரோட்டில் இறக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

Credits: Polimer

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக பாலாஜி கொடுத்த புகாரின் பேரில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து பாலகுமார் மற்றும் அவருடைய கூட்டாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதுகுறித்து தீபிகாவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், வீட்டிற்கு வரவில்லை என்றால் கொலை செய்துவிடுவேன் என அவருடைய தந்தை அடித்து உதைத்ததாக கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்