ஈ ஓட்டிய நபர் கோடீஸ்வரனானது எப்படி? பணத்தை கண்டதும் ருசி கண்ட பூனையாக மாறிய அதிரவைக்கும் பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

போதிய வருவாய் இன்றி தவித்து தன்னுடைய கம்ப்யூட்டர் செண்டரில் ஈ ஓட்டி வந்த இடைத்தரகர் ஜெயக்குமார் கோடீஸ்வரனானது எப்படி என்பது குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4, குரூப்2ஏ முறைகேடுகள் பூதாகரமாகி 45க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கத்தை கத்தையாக பணத்தை அள்ளிக் கொடுத்து அரசுப் பணியில் சேர்ந்த பலருக்கும், சேரத்துடித்த சிலருக்கும் இடைத்தரகர் ஜெயக்குமார் தான் காட்ஃபாதர்.

கடந்த 2013ஆம் ஆண்டு முதல் சென்னை ஆவடியில் கம்ப்யூட்டர் சென்டர் வைத்து தொழில் நடத்தி வந்துள்ளார் ஜெயக்குமார்.

அங்கு யாரும் வரமால ஈ ஓட்டி வந்த ஜெயக்குமார் போதிய வருவாய் இன்றி தவித்தபோதுதான், பள்ளிக் கல்வித்துறைக்காக ஆவணங்கள் நகல் எடுக்க வந்த டிஎன்பிஎஸ்சி ஊழியரான ஓம்காந்தனுடன் ஜெயக்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டது.

தான் நடத்தி வந்த கம்ப்யூட்டர் சென்டர் லாபத்தைக் கொடுக்காததால், டிஎன்பிஎஸ்சி ஊழியர்களுடன் ஏற்பட்ட நட்பை பயன்படுத்தி போட்டித் தேர்வுகளில் முறைகேடு செய்வதில் கற்றுத்தேர்ந்தார்.

அதன் மூலம் 2016 ஆம் ஆண்டு முதல் தனது நண்பரான ஓம்காந்தனுடன் இணைந்து டிஎன்பிஎஸ்சி அலுவலக கோப்புகளை கையாளும் அறையின் சாவி முதல் அதன் ரகசியங்களை கற்றுக் கொண்ட ஜெயக்குமார், ஓம்காந்தன் உதவியுடன் தேர்வில் முறைகேடு செய்வதை நடத்த ஆரம்பித்துள்ளார்.

பணத்தைக் கண்டதும் ருசி கண்ட பூனையாய் மாறிப் போன இருவருக்கும், தங்களால் அரசுப் பணியில் சேர்ந்தவர்கள் மூலம் சப்தமில்லாமல் விளம்பரம் செய்துள்ளனர். பதவிகளைப் பொறுத்து கரன்சிகள் கைமாற, சில்லறைக்கே சிங்கியடித்த ஜெயக்குமார் லட்சங்களில் பணம், கார் என்று தனது அந்தஸ்தை உயர்த்திக் கொண்டார்.

தொடர்ந்து முறைகேடு செய்வதையே முழு நேரத் தொழிலாகக் கொண்ட ஜெயக்குமார் தற்போது மேல்மருவத்தூர் அருகே 3 ஏக்கர் நிலத்தை வளைத்துப் போட்டிருப்பதையும் சிபிசிஐடி பொலிசார் கவனிக்கத் தவறவில்லை.

இந்த நிலையில்தான் டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் வெளியில் தெரிந்ததும் அங்குமிங்கும், ஆட்டம் காட்டிய பின் பொறியில் சிக்கிய எலியாய் ஜெயக்குமாரும், ஓம்காந்தனும் மாட்டிக் கொண்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers