வெளிநாட்டில் இருந்த இராணுவ வீரர்! உள்ளூரில் அவர் வீட்டுக்குள் புகுந்த திருடன் செய்த வினோத செயல்

Report Print Raju Raju in இந்தியா

கேரளாவில் ஒரு வீட்டுக்குள் புகுந்த திருடன் அது இராணுவ வீரரின் வீடு என்பதை தெரிந்து கொண்ட பின்னர் தன்னை மன்னித்து விடுமாறு சுவற்றில் நீண்ட வரிகளை கடிதமாக எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளான்.

எர்ணாக்குளம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஐசாக் மணி. முன்னாள் இராணுவ வீரரான இவர் வெளிநாட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் திருடன் ஒருவன் எர்ணாகுளத்தில் உள்ள ஐசாக் வீட்டின் பூட்டை உடைத்து கொண்டு உள்ளே நுழைந்துள்ளான்.

அங்கு அவன் எதிர்பார்த்த மாதிரியான எந்த பொருளும் சிக்கவில்லை. அப்போது அங்கிருந்த இராணுவ வீரர் அணியும் தொப்பியை பார்த்து அது இராணுவ வீரரின் வீடு என திருடன் உணர்ந்தான்.

இதையடுத்து தேசப்பற்று திடீரென திருடன் மனதில் பெருக்கெடுத்து ஓட அந்த வீட்டுக்குள் திருட வந்ததற்கு மன்னிப்பு கேட்க முடிவெடுத்தான்.

அதன் படி வீட்டு சுவற்றில், எனக்கு இது இராணுவ வீரரின் வீடு என முதலிலேயே தெரியாது, கடைசி நேரத்தில் தான் தெரிந்து கொண்டேன்.

என்னை மன்னித்து விடுங்கள், ஆரம்பத்திலேயே தெரிந்திருந்தால் வீட்டுக்குள் வந்திருக்க மாட்டேன் என தனது கைப்பட எழுதியிருந்தான்.

அதே வேளையில் ஐசாக் வீடு இருக்கும் பகுதியில் இருந்த ஐந்து கடைகளில் அதே இரவில் திருடு போயிருந்தது.

அதே திருடன் தான் ஐந்து கடைகளிலும் புகுந்துள்ளான்.

ஆனால் திருடப்பட்ட பர்ஸ் மற்றும் பணப்பையை ஐசாக் வீட்டில் திருடன் வீசி விட்டு சென்றுள்ளான் என பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

அதில் ரூபாய் 10,000 மட்டும் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வந்து ஆதாரங்களை சேகரித்துள்ளனர்.

பொலிசார் கூறுகையில், இந்த திருட்டில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.

எங்களை திசைதிருப்பவே சுவற்றில் இவ்வாறு எழுதப்பட்டிருக்கலாம் என நினைக்கிறோம்.

ஆனாலும் சுவற்றில் எழுதப்பட்டுள்ள கடிதம் திருடன்களை பிடிக்க எங்களுக்கு உதவும் என நம்புகிறோம் என கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்