ஒரே கோத்திரத்தில் திருமணம்: கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்திய தலைநகர் டெல்லியில் ஒரே கோத்திரத்தில் இருப்பவரை திருமணம் செய்த மகளை பெற்றோரே கொலை செய்து கால்வாயில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் வசிப்பவர் ஷீத்தல் சவுத்ரி (25). இவர் அங்கித் என்பவரை நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது.

இவர்கள் இருவரும் அக்டோபர் மாதம் ரகசியமாக திருமணம் செய்துக்கொண்டனர். ஷீத்தல் ஒரே கோத்திரத்தில் இருக்கும் அங்கித்தை திருமணம் செய்துகொண்டதை பெற்றோர் ஏற்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த குடும்பத்தினர் ஷீத்தலை காரில் கடத்தி சிக்கந்திராபாதுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

காரில் போகும் வழியிலேயே ஷீத்தலை அவரது பெற்றோரும் உறவினர்களும் சேர்ந்து கொன்று கால்வாயில் வீசியுள்ளனர்.

மனைவியின் நிலை அறியாத அங்கித் டெல்லியின் நியூ அசோக் நகர் காவல்நிலையத்தில் மனைவியை யாரோ கடத்தி விட்டார்கள் என்ற புகாரை 17 ஆம் திகதி பதிவு செய்தார்.

இதனையடுத்து விசாரணையை முடுக்கிய டெல்லி பொலிசார், ஷீத்தலின் பெற்றோரிடம் விசாரணையை தொடங்கினார்கள்.

இது குறித்து இந்த வழக்கை விசாரித்த அதிகாரி கூறியபோது " ஷீத்தலும் அங்கித்தும் அக்டோபரில் ரகசியமாக திருமணம் செய்துக் கொண்டனர்,

ஆனால் அந்தந்த குடும்பங்களுடன் தொடர்ந்து தங்கினர். ஜனவரி 30 ஆம் திகதி ஷீத்தல் தனது பெற்றோரிடமும் குடும்பத்தினரிடமும் திருமணத்தைப் பற்றி கூறியுள்ளார். அப்போது ஷீத்தலை குடும்பத்தினர் சேர்ந்து கழுத்தை நெரித்ததாக தெரிகிறது.

இதில் ஷீத்தல் மரணமடைந்துள்ளார். உடனடியாக அவரை காரில் கொண்டு சென்று 80 கி.மீ. தொலைவில் இருக்கும் கால்வாயில் ஷீத்தலை வீசியுள்ளனர்"

மட்டுமின்றி ஷீத்தலின் குடும்பத்தினரிடம் தனித்தனியாக விசாரித்ததும் முரண்பட்ட வகையில் பேசினர். இறுதியில், ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்ததை ஏற்கமுடியாததால் மகளை கொன்றதை பெற்றோர்களும் உறவினர்களும் ஒப்புக்கொண்டனர்."

இதனையடுத்து கொன்ற மகளை சிக்கிந்தராபாத்தில் இருக்கும் ஒரு கால்வாயில் வீசியது தெரிய வந்தது.

பின்பு, ஷீத்தலின் உடலை மீட்ட பொலிசார் அங்கித்திடம் ஒப்படைத்தனர். மேலும், இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ஷீத்தல் குடும்பத்தினர் 6 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்