பிள்ளைகளுக்கு சாப்பாடு வாங்கச் சென்றார்... சடலமாக திரும்பினார்: கலவரத்தால் பதறும் டெல்லி

Report Print Arbin Arbin in இந்தியா
1174Shares

இந்திய தலைநகர் டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பாளர்களால் ஏற்பட்ட கலவரத்தில் பிள்ளைகளுக்கு சாப்பாடு வாங்கச் சென்ற கைவினைக் கலைஞர் ஒருவர் மரணமடைந்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

வடகிழக்கு டெல்லியின் ஜாஃப்ராபாத் மற்றும் மஜ்பூர் உள்ளிட்ட பகுதிகளில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு பின்னர் அது பெரும்கலவரமாக வெடித்துள்ளது.

இதில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்த 75-கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர் வன்முறையால் வடக்கு டெல்லியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில், மரணமடைந்த 10 பேரில் ஒருவரான முஹம்மது ஃபுர்கான் என்பவரின் விவரங்கள் தற்போது தெரியவந்துள்ளது.

போராட்டம் தீவிரமடைந்துள்ள பகுதியான ஜாஃப்ராபாத் பாலத்துக்கு அருகில் உள்ள கர்தாம்பூரியில்தான் ஃபுர்கான் குடும்பத்துடன் தங்கி கைவினைப் பொருள்கள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

சம்பவத்தன்று வீட்டில் வேலை செய்துகொண்டிருந்தவர் குழந்தைகளுக்கு சாப்பாடு வாங்குவதற்காக வெளியே சென்றுள்ளார்.

அப்போது அவர் கலவரத்தில் சிக்கி மரணமடைந்துள்ளார் என்கிறார் ஃபுர்கானின் சகோதரர் இம்ரான்.

கைவினைக் கலைஞரான இம்ரான் இதுதொடர்பாக செய்தி ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், ``நான் மதியம் 2.30 மணி அளவில் வீட்டுக்குச் செல்லும்போது ஃபுர்கான் வீட்டில் இருந்தார்.

பிறகு ஃபுர்கான் தன் குழந்தைகளுக்கு உணவு ஏற்பாடு செய்வதற்காக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

அவர் சென்ற சிறிதுநேரத்தில் எனக்கு போன் வந்தது. ஃபுர்கான் காலில் சுடப்பட்டு உயிரிழந்துள்ளதாக சிலர் என்னிடம் கூறினர்.

முதலில் நான் அதை நம்பவில்லை. பிறகு ஃபுர்கானுக்கு நானே போன் செய்தேன். ஆனால், அவர் அதை எடுக்கவில்லை.

அப்போதுதான் நான் கவலைப்பட்டேன். மீண்டும் அடுத்தடுத்து போன் கால் எனக்கு வந்தது. மருத்துவமனையில் உன் சகோதரன் அனுமதிக்கப்பட்டுள்ளான் என்று அவர்கள் என்னிடம் கூறினர். உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தேன்.

ஆனால், அங்கு என் சகோதரன் உயிரிழந்த நிலையில் காணப்பட்டான். அவரைக் காப்பாற்றுமாறு மருத்துவர்களிடம் கெஞ்சினேன்.

அவரை வேறு ஏதேனும் ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்ற ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா என்று அவர்களிடம் கேட்டேன். வாய்ப்பு இல்லை என்று அவர்கள் என்னிடம் சொன்னார்கள்.

அவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அவர்களும் சின்னக் குழந்தைகள் என கண்ணீர் வடித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்