பணத்துக்காக தங்களின் கருமுட்டைகள், சிறுநீரகத்தை விற்கும் தமிழ்ப்பெண்கள்! வெளிவந்த பூதாகரமான தகவல்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தை சேர்ந்த பெண்கள் பணத்துக்காக தங்கள் கருமுட்டைகளை விற்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இது தொடர்பாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.

மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் திகதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தது. இதனால் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாத காசாக அறிவிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த நடவடிக்கை காரணமாக ஏராளமானோர் பணமின்றியும், உணவின்றியும் உயிரிந்தனர்.

இதன் பாதிப்பு இன்றுவரை தொடர்ந்து வருகிறது. குடிசைச்தொழிலாக நடைபெற்று வந்த விசைத்தறி உள்பட பல தொழில்கள் அடியோடு நசுங்கி போனது.

தமிழகத்தின் ஈரோடு பகுதிகளில் பெரும்பாலான குடும்பங்களில் விசைத்தறி குடிசைத்தொழிலாக நடைபெற்று வந்த நிலையில், மத்திய மாநில அரசுகளின் தவறான கொள்கைகளால், ஈரோடு-நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழில் பாதிக்கப்பட்டு கொடிய வறுமையை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதன் காரணமாக, அங்குள்ள பெண்கள் தங்களின் வறுமையைப் போக்கி பணம் பெற தங்களின் கருமுட்டை மற்றும் சிறுநீரகத்தை விற்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இதனை மேற்கோள்காட்டி தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின், மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை - பொருளாதாரச் சீரழிவு, அதிமுக அரசின் டாஸ்மாக் வியாபாரம் இவற்றால் ஈரோடு -நாமக்கல் மாவட்ட விசைத்தறித் தொழில் கடும் பாதிப்புக்குள்ளாகி, அதனை நம்பி இருந்த அனைவரின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது.

இதனால் ஏற்பட்டுள்ள கொடிய வறுமை நிலையை எதிர்கொள்வதற்காக, பெண்கள் தங்கள் கருமுட்டையை விற்பனை செய்யும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்ற நெஞ்சைப் பிளக்கும் செய்தி இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி, சிறுநீரகத்தை விற்பனை செய்யும் அவலமும் தொடர்கிறது. பெண்களின் உயிருக்கே ஆபத்தை உண்டாக்கி, குடும்பங்களில் வன்முறையை விதைக்கும் இந்த அவலம் எப்போது முடிவுக்கு வரும்?

பெயரளவுக்கு பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் கொண்டாடுவோர் இந்த விவகாரத்தின் மீது உண்மையான அக்கறையைச் செலுத்துவார்களா? என மு.க.ஸ்டாலின் வேதனையுடன் கேள்வியெழுப்பியுள்ளார்.

கருமுட்டைகளை தமிழ் பெண்கள் விற்பனை செய்வதாக வரும் செய்திகள் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், இது பெரும் விவாத விடயமாக மாறியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்