இந்தியாவின் கேரள மாநிலத்தில் கடுமையான கண் வலி காரணமாக மருத்துவர்களை நாடிய நபரை புற்றுநோய் என திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், அறுவை சிகிச்சையின்போது மருத்துவர்கள் அதிர்ந்து போயுள்ளனர்.
கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் 67 வயது நபர் ஒருவர் சுமார் 83 நாட்களாக மொத்த கண் மருத்துவமனைகளிலும் ஏறி இறங்கியுள்ளார்.
அவரது ஒரு கண்ணில் மட்டும் உயிர் பிரியும் வலி ஏற்பட்டு கடும் துன்பம் அனுபவித்து வந்துள்ளார். நகரில் அமைந்துள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
பரிசோதித்த மருத்துவர்கள் அவரது கண்ணில் புற்றுநோய் பாதித்துள்ளதாகவும், அறுவை சிகிச்சை மேற்கொண்டால் உயிர் போகும் ஆபத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
சில மருத்துவர்கள் புற்றுநோய்க்கான பரிசோதனைகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் தொண்டு நிறுவனங்கள் சார்பில் முன்னெடுக்கப்படும் கண் மருத்துவமனை ஒன்றில் அவர் சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
அங்குள்ள பெண் மருத்துவர் அவரை விரிவான சோதனைக்கு உட்படுத்திய பின்னர், நேற்று அறுவைசிகிச்சைக்கு நாள் குறித்துள்ளார்.
சில மணி நேரம் நீடித்த அந்த அறுவைசிகிச்சையில் அந்த 67 வயது நபரின் கண்ணில் இருந்து சுமார் 3.5 செ.மீ நீளம் கொண்ட மரத்துண்டு ஒன்றை அப்புறப்படுத்தியுள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் இவர் கால் தவறி மரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். அப்போது அவர் ஒரு மரக் கிளையில் விழுந்தபோது அவரது கண்ணில் காயம் ஏற்பட்டது.
ஆனால் ஒரு மரத்துண்டு இவரது கண்ணுக்குள் தங்கியது, இவர் அறியவில்லை என கூறப்படுகிறது.
தற்போது சிகிச்சைக்கு பின்னர், அந்த நபரின் பார்வைக்கு எந்த கோளாறும் இல்லை எனவும், குணமாக சில நாட்கள் ஆகும் மெனவும் முதன்மை மருத்துவர் தெரிவித்துள்ளார்.