கோழிக்கறியை சாப்பிட்டதால் கொரோனாவால் பாதிக்கப்பட்டாரா தமிழக இளைஞர்? வெளியான உண்மை தகவல்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் கடனுக்கு சிக்கன் தர மறுத்த கடையில் உள்ள கோழிகளில் கொரோனா வைரஸ் இருப்பதாக வதந்தி பரப்பிய சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை பீதியிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

இதனிடையில் கொரோனா வைரஸ் கோழி உள்ளிட்ட பறவைகள் மூலம் பரவுவதாக வெளியாகும் செய்திகள் இந்தியா முழுவதிலும் பீதியைக் கிளப்பியிருக்கின்றன.

இதன் காரணமாக பல இடங்களில் கோழிக் கறியின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தின் நெய்வேலியில் வசிக்கும் பாண்டி என்பவர் சில தினங்களுக்கு முன்னர் அங்குள்ள சிக்கன் கடையில் 1 கிலோ சிக்கன் வாங்கியுள்ளார்.

அதை வீட்டில் சமைத்துச் சாப்பிட்டபோது மதியம் 12 மணிக்குக் கடும் வயிற்று வலி ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை பெற அரசு பொது மருத்துவமனைக்குச் சென்றபோது அவருக்கு கொரோனோ வைரஸ் இருப்பதாகவும் அதற்கான மருந்துகள் தங்களிடம் இல்லாததால் கடலூர் அரசு மருத்துவனைக்குச் செல்லும்படி அந்த மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

தற்போது, அவர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது பாண்டு மகன் பாண்டிக்கு மருத்துவர்கள் 48 மணி நேரம் கெடு விதித்திருக்கிறார்கள். அவரது உடல் கவலைக்கிடமாக இருக்கிறது என்பதாக ஒரு தகவல் கடந்த சில தினங்களாக கடலூர், நெய்வேலி உள்ளிட்ட பகுதிகளின் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.

நெய்வேலியில் கொரோனா வைரஸ் பாதிப்பு என்ற தகவலால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து பாண்டி கறி வாங்கிய கடைக்கு கூட்டம் வராததால் அதிர்ந்து போன அதன் உரிமையாளர் பக்ருதீன், நண்பர்கள் வாயிலாக நடந்ததை தெரிந்து கொண்டார்.

இதையடுத்து சக்திவேல் என்ற சிறுவனே அனைத்துக்கும் காரணம் என பொலிசில் புகார் அளித்தார்.

அதில், தனது கடையில் அடிக்கடி சிக்கன் வாங்கிய 17 வயது சிறுவன் சக்திவேல் அதற்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றி வந்தான், மீண்டும் கடனுக்கு சிக்கன் கேட்ட போது நான் தரவில்லை.

இதையடுத்து என்னை பழிவாங்குவதாக சவால் விட்டு வேண்டுமென்றே கொரோனா வதந்தியை பரப்பியுள்ளான் என குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து சக்திவேல் கைது செய்த பொலிசார் அவனை சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

இது குறித்து பேசிய பொலிஸ் அதிகாரி லதா, பாண்டி என்பவருக்கு கொரோனா ஏற்பட்டது என்பது முழுவதும் சக்திவேல் பரப்பிய வதந்தி தான், சிக்கன் தராததாலும் தனது நண்பர் பாண்டியைக் கலாய்ப்பதற்காகவும் சக்திவேல் இவ்வாறு செய்துள்ளார் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...