இந்தியாவில் கொரோனாவில் இருந்து காப்பாற்றப்பட்ட முதல் நபர்! பாதிப்பு, அறிகுறி, சிகிச்சை குறித்து விளக்கம்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் அதில் இருந்து மீண்டது எப்படி? நோய் தொற்று எப்படி ஏற்பட்டது என்று குறித்து முதல் முறையாக கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் 114 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர். 13 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

இதில் டெல்லியை சேர்ந்த ரோகித் தத்தா(45) என்பவரும் ஒருவர். 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்த இவர், இப்போது முழுவதுமாக குணமடைந்துள்ள நிலையில், அது குறித்து பகிர்ந்துள்ளார்.

அதில், நான் கடந்த மாதம் இத்தாலியில் நடந்த தோல் கண்காட்சியில் கலந்து கொண்ட போது, கொரோனா பாதிப்பு குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை.

அதன் பின், நான் என்னுடைய மைத்துனர்களுடன் ஐரோப்பாவிற்கு சென்றேன். அங்கும் நாங்கள் மூன்று பேரும் ஆரோக்கியமாகவே இருந்தோம், எங்களுக்கு எந்த ஒரு அறிகுறியும் தெரியவில்லை.

ரோகித் தத்தா

விமான நிலையத்திலும் பாதிப்பு குறித்து எங்களை பரிசோதிக்கவில்லை. காய்ச்சல் மட்டுமே இருந்ததால் மாத்திரை உட்கொண்டு படுத்தேன். அடுத்த சில நாட்களில் இத்தாலியில் கொரோனா பரவத்தொடங்கியது. அங்கிருந்து வந்ததால் நான் பயந்தேன். என்னை பரிசோதனை மேற்கொள்ளுமாறு குடும்பத்தார்கள் வற்புறுத்தினர்.

இதையடுத்து, நான்,ராம் மனோகர் லோஹியா மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டேன். அதில் கொரோனா உறுதிப்படுத்தப்பட்டதும் 30 நிமிடங்களில் சப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றினர்.

இதனால், குடும்பத்தார்கள், நண்பர்களின் வீடுகளிலும், இவர்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளியிலும் அனைவரும் சோதிக்கப்பட்டனர். தனிமைப்படுத்தப்பட்ட நான், எனது குடும்பத்தினருடன் வீடியோ கால் பேசவும், பொழுதுப்போக்க இணையத்தில் படங்களையும் பார்த்து வந்தேன்.

அப்போது மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் என்னை தொடர்பு கொண்டு ஹோலிக்கு வாழ்த்து கூறியது ஆச்சரியமாக இருந்தது.

சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

அதுமட்டுமின்றி, நான் எப்படி உணர்கிறேன், எனக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருக்கிறதா, மருத்துவமனையில் உணவு எனக்கு பிடித்திருக்கிறதா? என்று அன்போடு கேட்டார்.

கொரோனா நோயாளிகளின் நிலையை அவரும் பிரதமர் மோடியும் தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருவதாக அவர் தெரிவித்தார். நாட்டின் சுகாதார அமைச்சர் தொடர்பு கொண்டதை கற்பனை செய்ய முடியவில்லை, அவ்வளவு எளிமையாக இருந்தது.

அதுமட்டுமின்றி நான் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மருத்துவமனை வார்டு, ஒரு சொகுசு ஹோட்டல் போன்று இருந்தது. அங்குள்ள ஊழியர்கள் உயர் சுகாதாரத்தை பராமரித்தனர்.

படுக்கையின் மேற்பரப்பை சுத்தம் செய்தனர், ஒரு நாளைக்கு இருமுறை கையுறைகளை மாற்றினர். எனது அறையில் ஒவ்வொரு நாளும் சாணக்ய நீதி படிப்பதையும், இருமுறை பிராணாயாமம் (மூச்சு பயிற்சி) செய்வதையும் பின்பற்றினேன்.

எனக்கு கொரோனா உறுதிப்படுத்தியபோது, இறக்கப்போகிறேன் என பயந்தேன். ஆனால், மருத்துவமனை ஊழியர்கள் மிகவும் உதவினர். தங்கள் உயிரை பொருட்படுத்தாமல், எனக்கு உதவிய செவிலியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் அறிகுறிகள் இருந்தால், தங்களின் பயண வரலாறுகளை துல்லியமாக கூறி பரிசோதனை மேற்கொள்ளுங்கள். அப்போது தான் உடன் பயணித்தவர்களும், அவர்களின் குடும்பத்தார்களின் உயிர்களும் காக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்