நள்ளிரவில் தூக்கில் தொங்கிய கர்ப்பிணி பெண்! அதே துப்பட்டாவில் தற்கொலை செய்த கணவன்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் திருமணமான 8 மாதத்தில் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பண்ருட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் (29). இவர், கோவில் கோபுரத்தில் உள்ள பொம்மைகளுக்கு வர்ணம் தீட்டும் பணி செய்து வந்தார்.

இவரும் மகேஸ்வரி (22) என்ற பெண்ணுக்கு உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் இருவரது பெற்றோருக்கும் தெரியவந்தது.

ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவரது வீட்டிலும் காதலுக்கு பச்சைக்கொடி காட்டினர். பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்மதத்துடன் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்ததும் புதுமண தம்பதி, தனி வீட்டில் வசித்து வந்தனர். இதனிடையே மகேஸ்வரி 3 மாத கர்ப்பிணியாக இருந்தார். மணிகண்டன் மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையானார்.

தினமும் அவர் காலையில் வேலைக்கு செல்வதும், மாலையில் மது குடித்து விட்டு வீட்டிற்கு வருவதையும் வாடிக்கையாக கொண்டிருந்தார். ஆனால் கணவரின் இந்த செயல், மகேஸ்வரிக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர் கடுமையாக கண்டித்தும் மணிகண்டன் கேட்கவில்லை.

வழக்கம்போல் மணிகண்டன் நேற்று முன்தினம் இரவும் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். இதை தட்டிக்கேட்ட அவரது மனைவியிடம் தகராறு செய்தார். பின்னர் சிறிது நேரத்தில் மணிகண்டன் தூங்கி விட்டார். இதனால் மனமுடைந்த மகேஸ்வரி, துப்பட்டாவால் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நள்ளிரவில் போதை தெளிந்ததும் தூக்கத்தில் இருந்து கண்விழித்த மணிகண்டனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மனைவி தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு, அவர் கதறி அழுதார். உடனே அவர், மகேஸ்வரியை தூக்கில் இருந்து இறக்கினார். பின்னர் மனைவி தற்கொலை செய்து கொண்ட அதே துப்பட்டாவால் மணிகண்டனும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதற்கிடையில நேற்று காலை 6.30 மணி வரை மணிகண்டனும், அவரது மனைவியும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. ஆனால் வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இது அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. உடனே அவர்கள், வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அங்கு புதுமண தம்பதி பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது பற்றி தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் மணிகண்டன், மகேஸ்வரி ஆகியோரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் பொலிசார் மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டதற்கு முன்பு எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றினார்கள்.

அதில், எனது குடிபழக்கத்தால் மனைவியையும், அவரது வயிற்றில் வளர்ந்த சிசுவையும் பறிகொடுத்து விட்டேன். அவர் இல்லாத இந்த உலகத்தில் நானும் வாழமுடியாது. எனவே என் மனைவி சென்ற இடத்திற்கே நானும் செல்கிறேன் என எழுதப்பட்டிருந்தது.

இது குறித்த புகாரின் பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்