டெல்லி மாநாட்டில் பங்கேற்ற பெரும்பாலானோருக்கு கொரோனா உறுதி!... தீவிர விசாரணையில் பொலிசார்

Report Print Abisha in இந்தியா

வெளிநாட்டினர் பங்குபெற்ற மாநாட்டால் இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவிவருகிறது.

இந்தியாவில் இதுவரை 1238பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 35பேர் உயிரிழந்துள்ளனர். 123பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கிடையே, தலைநகர் டெல்லியில் உள்ள நிஜாமுதீன் என்ற பகுதியில் கடந்த மாதம் 13 முதல் 15-ம் திகதி வரை தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மத குருக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அதில், பங்கேற்ற பலருக்கும் தற்போது கொரோனா தொற்று இருப்பது கண்டறியபட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவ இந்த கூட்டம் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

இந்நிலையில், நிஜாமுதீன் பகுதியில் தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய அமைப்பின் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் 157 பேர் நிகழ்ச்சி முடிந்த பின்னர் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் உள்ள 16 மசூதிகளுக்கு சென்று அங்கு தங்கி இருந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நிஜாமுதீன் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் 157 பேர் டெல்லியின் தென்கிழக்கு, வடகிழக்கு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள 16 மசூதிகளில் தங்கியுள்ளனர்.

அவ்வாறு தங்கியவர்களில் 94 பேர் இந்தோனேசியா, 13 பேர் கஜகஸ்தான், 9 பேர் பங்களாதேஷ், 8 பேர் மலேசியா, 7 பேர் அல்ஜீரியா மற்றும் இத்தாலி, துனிசியா, பெல்ஜியம் தலா ஒருவர் என மொத்தம் 138 பேர் வெளிநாட்டினரும் எஞ்சிய 19 பேர் இந்தியர்கள் ஆவர்.

இதையடுத்து, டெல்லி சிறப்பு பிரிவு பொலிஸ் இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி வருகிறது.

மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மசூதிகளுக்கு சென்று அங்கு தங்கியுள்ள வெளிநாட்டினரை உடனடியாக தனிமைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் மாவட்ட நிர்வாகத்திற்கு சிறப்பு பொலிஸ் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

இதனால், பொலிசார் மசூதிகளில் தங்கி இருங்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்