கொரோனா நோயாளிகள் உயிரை காப்பாற்ற போராடிய மருத்துவரின் 9 மாத கர்ப்பிணி மனைவிக்கு நோய் தொற்று!

Report Print Raju Raju in இந்தியா

கொரோனா நோயாளிகளுக்கு தொடர் சிகிச்சையளித்து அவர்களின் உயிரை காப்பாற்ற போராடிய மருத்துவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் அவரின் நிறைமாத கர்ப்பிணி மனைவிக்கும் வைரஸ் தொற்று இருப்பது பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த எய்ம்ஸ் உயர் அதிகாரிகள் உடனடியாக அந்த மருத்துவரை தனிமைப்படுத்தி தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

இதனிடையே கொரோனா பாதித்த மருத்துவரின் 9-மாத கர்ப்பிணி மனைவிக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையின் தனி வார்டிலேயே பிரசவம் பார்ப்பதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுடைய எய்ம்ஸ் மருத்துவரை பொறுத்தவரை எந்த வெளிநாடு பயண வரலாறும் இல்லாதவர்.

அப்படியிருந்தும் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என முடிவுகள் வந்துள்ளதால் நோய் தொற்றுக்கான ஆதாரங்கள் மற்றும் தொடர்புகள் பற்றிய விவரங்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் துப்பு துலக்கி வருகின்றனர்.

இதனிடையே சக மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டுள்ளதால் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இதேபோல் டெல்லி சப்தர் ஜங் மருத்துவமனையில் பணியாற்றி வந்த இரண்டு உறைவிட மருத்துவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்திருக்கிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்