இதை குடித்தால் கொரோனா தாக்காது! மனைவி கொடுத்த கசாயத்தை நம்பி குடித்த கணவன்.. பின்னர் நடந்த சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா
1171Shares

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்ப கசாயம் தருவதாக கூறி கணவனுக்கு தூக்க மருந்து கொடுத்துவிட்டு நகைகளை கொள்ளையடித்த மனைவி வசமாக சிக்கியுள்ளார்.

தூத்துக்குடியை சேர்ந்தவர் வின்செண்ட் (58). இவரது மனைவி ஜான்சி ஏலச்சீட்டு நடத்தி வருகின்றார். வின்செண்ட் - ஜான்சி தம்பதிக்கு இரு மகள்கள், இருவரும் திருமணம் செய்து கொடுத்து விட்ட நிலையில் வீட்டில் கணவன் மனைவி மட்டும் வசித்து வருகின்றனர்.

ஊரடங்கு உத்தரவால் இருவரும் வீட்டுக்குள் முடங்கி இருந்த நிலையில் உள்பக்கம் பூட்டப்பட்ட வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 100 சவரன் நகைகளை கொள்ளையன் அள்ளிச்சென்றுவிட்டதாக வின்செண்ட் பொலிசில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக பொலிசார் விசாரணையை தொடங்கினர்.

துறைமுக ஊழியரான வின்செண்ட் மிகவும் சிக்கனமாக இருந்து பணத்தை கொண்டு பழைய நகைகளை வாங்கி சேமித்து வந்துள்ளார். அந்தவகையில் சுமார் 93 சவரன் நகைகளை வங்கியில் உள்ள லாக்கரில் பாதுகாப்பாக வைத்திருந்துள்ளார். சில தினங்களுக்கு முன்பாக வின்செண்ட் செல்போனுக்கு வங்கியில் இருந்து பேசுவதாக அழைப்பு ஒன்று வந்துள்ளது.

அதில் பேசிய பெண் ஒருவர், வங்கியில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதால் தங்கள் மனைவியை அழைத்து வந்து நகையை எடுத்து சென்றுவிடுங்கள் என்று கூறியுள்ளார். இதையடுத்து வங்கி லாக்கரில் இருந்து நகைகளை மொத்தமாக எடுத்து வந்து வீட்டு பீரோவில் வைத்திருந்த நேரத்தில் தான் இந்த கொள்ளை சம்பவம் நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.

வங்கியில் விசாரித்த போது வங்கியில் இருந்து வின்செண்டுக்கு யாரும் போன் செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்தினர். வீட்டில் இருவர் மட்டுமே இருக்கும் நிலையில் பூட்டப்பட்ட வீட்டுக்குள் யார் வந்திருப்பார்கள் ? என்று அவரது மனைவி ஜான்சியை அழைத்து விசாரித்தபோது முன்னுக்கு பின் முரனாக பதிலளித்த அவர் வசமாக சிக்கினார்.

ஏலசீட்டு நடத்திவந்த ஜான்சிக்கு பலர் ஏலத்தொகையை கட்டாமல் கம்பி நீட்டியதால் 10 லட்சம் ரூபாய் வரை கடன் இருந்துள்ளது.

வீட்டில் உள்ள பணத்தை நகையாக வாங்கி அத்தனை நகையையும் வங்கியில் கொண்டு வைத்து விடுவதால், பணத்தேவைக்கு என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கிய ஜான்சி நகைகளை திருட முடிவு செய்தார்.

அதன்படி வீட்டிற்கு வெளியே போய் வேறொரு போனில் இருந்து வங்கி லாக்கரில் உள்ள நகைகளுக்கு பாதுகாப்பில்லை என கணவருக்கு தகவல் கூறினார்.

இதையடுத்து ஒரு கசாயத்தை தயார் செய்த ஜான்சி, இதை குடித்தால் கொரோனா தாக்காது என கூறி ஏமாற்றி அதில் தூக்க மாத்திரையை கலந்து கணவருக்கு கொடுத்ததால், அதனை குடித்த வின்செண்ட் ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்று விட்டார்.

பின்னர் அவரது இடுப்பில் இருந்து சாவிக்கொத்தை எடுத்து பீரோவை திறந்து 93 சவரன் நகையை அள்ளிச்சென்று வீட்டுக்கு வெளியே புதைத்துள்ளார். பின்னர் வீட்டுக்குள் வந்து வீட்டை உள்பக்கமாக பூட்டிவிட்டு, பீரோவில் இருந்த துணிகளை கலைத்து போட்டுவிட்டு வீட்டு சாவியை பீரோவுக்கு பின்பக்கம் தூக்கி வீசிவிட்டதாக கூறப்படுகின்றது.

ஜான்சி சுட்டிக்காட்டிய இடத்தில் இருந்து 93 சவரன் நகைகளை கைப்பற்றிய பொலிசார் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்