செல்போனில் ஆபாச படங்கள்... காதல் கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய பெண்

Report Print Arbin Arbin in இந்தியா

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் காதல் கணவரை அடித்துக் கொலை செய்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய பெண் குடும்பத்தினருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

காதல் கணவர் வேறு பெண்களுடன் பேசிக்கொண்டே செல்போனில் ஆபாச படம் பார்த்ததால் ஆத்திரத்தில் இந்த கொலை நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் கடலோர கிராமத்தைச் சேர்ந்தவர் சோபாஸ். இவரது மகள் ஜாப்பிலின் சென்னையில் கல்லூரியில் படித்தபோது ஆர்.கே.நகரை சேர்ந்த கார்க்கி என்பவரை காதலித்து பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார்.

இரு குழந்தைகள் பிறந்தபின் சென்னையிலிருந்து சொந்த ஊர் திரும்பிய ஜாப்பிலின் தந்தை கட்டிக்கொடுத்த வீட்டில் வசித்து வந்தார்.

மேலும் அப்பகுதியிலேயே சூப்பர் மார்க்கெட் ஒன்றை கணவன் மனைவியும் நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஜாப்பிலின் வீட்டிலிருந்து அழுகை சத்தம் கேட்டதால் அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர்.

அங்கு சென்று பார்த்தபோது தனது கணவர் கார்க்கி தூக்கு மாட்டி இறந்ததாகவும் உடலை கயிற்றிலிருந்து இறக்கி வைத்துள்ளதாகக் கூறி கண்ணீர் தாரைதாரையாக பொங்க அழுது புரண்டார் ஜாப்பிலின்.

தகவலறிந்து வந்த காவல்துறையினர் கார்க்கி உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உடற்கூறு ஆய்வில் கார்க்கி தற்கொலை செய்து கொண்டதற்கான அடையாளம் இல்லை என்றும் உடலில் பல காயங்கள் இருப்பதால் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து கார்க்கியின் மனைவியை மீண்டும் விசாரித்த பொலிசாரிடம், தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கனவரைக் கொலை செய்ததை ஜாப்பிலின் ஒப்புக்கொண்டுள்ளார்.

தனது கணவர் வேறு பல பெண்களோடு செல்போனில் பேசியதாகவும், பெண்களுடன் பேசிக் கொண்டே தனிமையில் ஆபாச படங்கள் பார்த்து வந்ததாகவும் இதுகுறித்து கேட்ட போது பிரச்சனை உருவானது என்று ஜாப்பிலின் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினமும் பெண் ஒருவருடன் செல்போனில் கணவர் பேசுவதை கவனித்து கேட்ட போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் தன்னை அடித்ததால் கோபமடைந்த தனது தந்தை மற்றும் அண்ணனுக்கு தகவல் தெரிவித்ததாகவும் ஜாப்பிலின் கூறியுள்ளார்.

இதனை அடுத்து வீட்டிற்கு வந்த ஜாப்பிலின் தந்தை ஜோபாஸ் மற்றும் சகோதரர், கார்க்கியிடம் செல்போனை தருமாறு கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் மறுக்கவே மூவரும் சேர்ந்து கட்டிப்போட்டு அவரது செல்போனை பறித்து பார்த்துள்ளனர்.

அதில் பல பெண்களின் எண்களும், ஆபாச படங்களும் நிறைந்திருந்ததால் கோபத்தின் உச்சிக்கு சென்ற அவர்கள் கார்க்கியை கடுமையாக தாக்கியுள்ளனர்.

மேலும் அவரை அப்படியே காயத்துடன் விட்டுவிட்டு ஜாப்பிலின் தந்தை மற்றும் சகோதரர் சென்றுவிட ஜாப்பிலின் வீட்டின் வேறு ஒரு அறையில் தூங்கச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் காலையில் எழுந்து பார்த்தபோது கார்க்கி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து மீண்டும் தனது தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளார் ஜாப்பிலின்.

அவரது திட்டத்தின் படி கொலையை மறைக்க சதித்திட்டம் தீட்டிய அவர்கள் கார்க்கி தற்கொலை செய்து கொண்டது போல நாடகமாடி உள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து ஜாப்பிலின் அவரது தந்தை ஜோபாஸ் உள்ளிட்ட மூவரையும் கொலை வழக்கு தொடர்பில் பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்