சிறையில் இருந்து வெளியில் வரும் சசிகலா எங்கே தங்கப்போகிறார்? அசுர வேகத்தில் தயாராகி வரும் புது வீடு

Report Print Santhan in இந்தியா

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, அடுத்த மாதம் விடுதலையாகவுள்ளதாக செய்தி வெளியான நிலையில், தற்போது அவருக்கு புதிய வீடு ஒன்றை கட்டும் பணி நடந்து வருகிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையிலிருக்கும் சசிகலா வரும் ஆகஸ்ட் மாதம் விடுதலையாகி வெளியே வர வாய்ப்பிருப்பதாக கூறப்பட்ட நிலையில், அதை உறுதி செய்யும் வகையில், பாஜகவின் ஆசிர்வாதம் ஆச்சாரி தனது டுவிட்டர் பக்கத்தில் சசிகலாவின் விடுதலை குறித்து பதிவிட்டிருந்தார்.

இதனால் சசிகலாவின் உறவினர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா சிறைக்குச் சென்றபோது போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லமான வேதா இல்லத்திலிருந்துதான் சென்றார்.

ஆனால், அ.தி.மு.க அரசு ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றப்படும் என அறிவித்து, அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது

இதனால் தற்போது சசிகலா விடுதலையாகவுள்ள நிலையில், அவர் எங்கு தங்குவார் என்ற சந்தேகம் எழுந்தது.

இது குறித்து சசிகலாவின் உறவினர்களிடம் பிரபல தமிழ் ஊடகம் விசாரித்த போது, கணவர் நடராஜன் இறந்த பிறகு அவரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள 10 நாள்கள் பரோலில் வந்த சசிகலா தஞ்சாவூர் அருளானந்த நகர் அருகே உள்ள பரிசுத்தம் நகரில் தங்கினார்.

மனைவி சசிகலாவுடன் சேர்ந்து வாழ வேண்டும் என ஆசை ஆசையாக நடராஜனால் பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட அந்த வீட்டில் ஒருநாள் கூட இருவரும் சேர்ந்து வாழவில்லை.

இந்தக் கவலை இரண்டு பேருக்குமே இருந்துள்ளது. கணவரின் இறுதிச்சடங்கை முடித்துவிட்டு அந்த வீட்டில் தங்கியிருந்த சசிகலா தனது உறவினர்களிடம் இதைப் பற்றிக் கூறியிருக்கிறார்.

அந்த வீட்டின் முதல் தளத்தில் நடராஜனுக்கு என்று பிரத்யேக அறை உள்ளது. அந்த அறையில்தான் சசிகலா தங்கினார்.

பரோல் முடிந்து சென்ற பிறகு வாஸ்து சாஸ்திரப்படி அந்த அறையில் சில மாற்றங்களைச் செய்துவிட்டுச் சென்றார்.

என் கணவரின் ஆன்மா உள்ள இடமான இந்த வீட்டைப் பத்திரமாக கவனித்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லி சென்றுள்ளார்.

நடராஜனின் தம்பி ராமச்சந்திரனின் குடும்பம்தான் அவ்வப்போது அந்த வீட்டைப் பயன்படுத்திக்கொண்டு வருகிறது.

சென்னையில் கொரோனா பரவிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் சசிகலா வெளிய வரும் நேரத்தில் கொரோனாவின் பாதிப்பு அதிக அளவில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

தஞ்சாவூர் இல்லம்

போயஸ் கார்டன் இல்லத்துக்கும் செல்லமுடியாது போன்ற காரணங்களால் சசிகலா சென்னைக்குச் செல்ல மாட்டார். தஞ்சையில் உள்ள வீட்டிற்கு வந்து தங்குவதற்குத்தான் வாய்ப்புகள் உள்ளன.

ஏனெனில், யாருடைய உறவினர்கள் வீட்டிலும் தங்குவதற்கு சசிகலாவிற்கு விருப்பமில்லை. அப்படி யாரோ ஒருவர் வீட்டில் தங்கினால் மற்றவர்களுக்கு வருத்தம் உண்டாகும். இதைத் தவிர்க்கவே தஞ்சையில் உள்ள இல்லத்திற்குச் செல்வதை சசிகலா விரும்புகிறார்.

அதே சமயம் ஜெயலலிதாவுடன் சுமார் 25 வருடங்களுக்கு மேல் போயஸ் கார்டனில் இருந்தார் சசிகலா. அந்த இல்லம் தற்போது தன்னுடைய கட்டுப்பாட்டில் இல்லாமல் இருப்பது அவருக்கு வருத்தமாக உள்ளதாம்.

மேலும் போயஸ்கார்டன் பகுதியில் இருந்தால் கைவிட்டுச் சென்ற ஆட்சி, அதிகாரம் மற்றும் கட்சி நிர்வாகம் என அனைத்தும் திரும்பக் கிடைக்கும் என நினைக்கிறார்.

இதற்காக வேதா இல்லத்துக்கு எதிரிலேயே சசிகலாவுக்கு என புதிய வீடு கட்டும் பணி நடந்துவருகிறது. அவை தற்போது முடிவடையும் தறுவாயில் உள்ளது.

இளவரசியின் மருமகன் ராஜராஜன் மேற்பார்வையில்தான் இந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னையில் இருந்தால் கட்சிப் பணிகளையும் அரசியல் நிகழ்வுகளையும் கவனிப்பதற்குச் சரியாக இருக்கும் என்பதால் சசிகலா அங்கு தங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

பெசன்ட் நகரிலும் நடராஜனுக்குச் சொந்தமான இல்லம் உள்ளது. அங்கு செல்வதற்கான எண்ணம் அவருக்கு இல்லை.

பெரும்பாலும் தஞ்சையில் உள்ள வீடு அல்லது போயஸ்கார்டனில் தயாராகும் புதிய வீட்டில் தங்குவார் என்றே தெரிவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இதனால் நிச்சயம் வெளியில் வந்தால் சசிகலா அரசியலில் ஒரு ஆட்டத்தை காண்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்