இரு மாதங்களுக்குத் தேவையான கேஸ் சிலிண்டர்களை இருப்பு வைக்க உத்தரவு: பதற்றத்தில் பொதுமக்கள்!

Report Print Arbin Arbin in இந்தியா

இந்திய மாநிலம் காஷ்மீரில் இரு மாதங்களுக்குத் தேவையான சமையல் எரிவாயு சிலிண்டர்களை இருப்பில் வைத்திருக்க அம்மாநில உணவு மற்றும் பொது விநியோகத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசின் இந்த திடீர் உத்தரவானது காஷ்மீர் மக்களிடையே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீரில் நிலச்சரிவு காரணமாக தேசிய நெடுஞ்சாலை முழுவதுமாக மூடப்படும் சூழ்நிலை இருப்பதால், மக்களுக்கு கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவக் கூடாது என்ற அடிப்படையில் போதிய கேஸ் சிலிண்டர்களை இருப்பு வைத்திருக்க வேண்டும் என்று துணைநிலை ஆளுநரின் ஆலோசகர் உணவுத் துறைக்கு அறிவுறுத்தினார்.

அதன்படி, மாநில உணவு மற்றும் பொது விநியோகத் துறை இயக்குனர், காஷ்மீரில் இரு மாதங்களுக்குத் தேவையான கேஸ் சிலிண்டர்களை எண்ணெய் நிறுவனங்கள் இருப்பில் வைத்திருக்க வேண்டும் என்றும் இது மிகவும் அவசர உத்தரவு என்றும் கூறியுள்ளார்.

அதேபோன்று காஷ்மீர் கந்தர்பால் மாவட்ட காவல்துறை முதன்மை அதிகாரி அமர்நாத் யாத்திரையையொட்டி, மத்திய ஆயுத பொலிஸ் படையினர் தங்குவதற்கு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளை காலி செய்து ஒப்படைக்குமாறு கூறியுள்ளார்.

கடந்த ஆண்டும் இதேபோன்று ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சூழ்நிலையில்தான் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து மற்றும் பாலகோட் தாக்குதல் நடைபெற்றது.

மேலும், குளிர்காலத்தில்தான் காஷ்மீரில் நிலச்சரிவு ஏற்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்படும்.

தற்போது கோடைக்காலம். அதேபோன்று கொரோனா காரணமாக இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரைக்கு குறைவான நபர்களே வருவார்கள்.

அவ்வாறு இருக்கையில் இவ்வளவு பாதுகாப்பு எதற்கு? என்ற சந்தேகங்களால் அரசின் இந்த உத்தரவு மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், அத்தியாவசியப் பொருள்களின் பற்றாக்குறையைத் தடுக்கவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து சிலர் பரப்பும் தவறான தகவல்களை மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றும் உணவுத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சி துணைத் தலைவருமான ஒமர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில்,

காஷ்மீர் அரசின் உத்தரவுகள் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளன. கடந்த ஆண்டு சிறப்பு அந்தஸ்து ரத்து சமயத்தில் அரசு அளித்த அனைத்து வாக்குறுதிகளும் பொய்யாகி விட்டன.

எனவே, தற்போதைய அரசின் விளக்கங்களுக்கு மக்களிடம் மதிப்பு இருக்காது. இதுகுறித்து அரசு மேலும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்