கேரளாவில் மண்ணில் புதைந்த தமிழக குடும்பம்... ஒரே குடும்பத்தை சேர்ந்த 21 பேர் பலி!

Report Print Santhan in இந்தியா

இந்தியாவின், கேரளாவில் பெய்த கனமழை காரணமாக, நிலச்சரிவில் சிக்கி ஏராளமான தமிழர்கள் உயிரிழந்திருக்கும் நிலையில், தற்போது ஒரே குடும்பத்தை சேர்ந்த 21 பேர் பலியாகியிருப்பது தெரியவந்துள்ளது.

கேரளா மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாக, தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்த்தது. மழை ஓய்ந்த நிலையில், பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.

இந்த நிலையில், மீண்டும், மாநிலம் முழுவதும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. அதன் படி, சில தினங்களுக்கு முன்பு, மாநிலம் முழுவதும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது.

இந்த கனமழை காரணமாக இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 55 தமிழர்கள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், மூணாறு அருகே நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் மற்றும் மாயமானவர்கள் அனைவரும் துாத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தினை சேர்ந்தவர்கள் என்றும், இதில் துாத்துக்குடி மாவட்டம், கயத்தாறை சேர்ந்தவர்கள், 60 ஆண்டுகளுக்கு முன், மூணாறு வந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

தலைமுறை தலைமுறையாக இவர்கள் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வந்துள்ளனர். அதில், அனந்தசிவன், அவரது சகோதரர்கள் கணேசன், மயில்சாமி ஆகியோரின் குடும்பத்தைச் சேர்ந்த, 21 பேர் மண்ணிற்குள் புதைந்து பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

மூணாறு ஊராட்சியில், அனந்தசிவன் வார்டு உறுப்பினராகவும், மயில்சாமியும், கணேசனும் வனத்துறையில் டிரைவராகவும் பணியாற்றி வந்துள்ளனர்.

அவர்களது குடும்பத்தில், மூணாறு காலனியில் வசிக்கும் சண்முகம், அவரது மனைவி ஆகியோர் மட்டுமே தப்பியுள்ளனர்.

சண்முகம் மகன்கள் தினேஷ்குமார்(22) நிதிஷ்குமார்(18) ஆகியோர் பெரியப்பா அனந்தசிவனின் வீட்டிற்கு பிறந்த நாள் கொண்டாட வந்தபோது நிலச்சரிவில் சிக்கினர்.

இந்த நிலச்சரிவில் தென்காசி மாவட்டம், கலிங்கப்பட்டி பிள்ளையார்குளத்தை சேர்ந்தவர்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது ஒரே குடும்பத்தை சேர்ந்த 21 பேர் பலியாகியிருப்பது தெரியவந்துள்ளதால், இது ஏற்கனவே 55 பேர் இறந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டவர்களில் இருந்தவர்களா? இல்லை இது புதிததாக இறந்தவர்களா? என்பது குறித்து தகவல் இல்லை.


மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்