உயிரிழந்த எம்.பி வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று எப்படி ஏற்பட்டது? மளிகை கடை முதல் மக்களவை உறுப்பினர் ஆன வரை

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் கன்னியாகுமரி தொகுதி மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்த நிலையில், அவரைப் பற்றி சில தகவல்களை இங்கு பார்ப்போம்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் மிரட்டி வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக உலகசுகாதார அமைப்பின் படி 33-லட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 60-ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் மட்டும், கொரோனாவால் நான்கு லட்சத்திற்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். 7000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று தமிழகத்தின் கன்னியா குமாரி தொகுதி எம்.பி. கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இவர் கடந்த 11-ஆம் திகதி முதல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவரும், அவரது மனைவியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மனைவி குணமடைந்தார்.

இந்நிலையில், நுரையீரல் தொற்று அதிகரிப்பால் நேற்று அபாய கட்டத்தில் சென்ற வசந்தகுமார் நேற்று மாலை மரணமடைந்தார்.

இவர், கடந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற சாதனை பெற்றவர். இவர் 6,27,235 வாக்குகள் பெறறிருந்தார்.

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் 2,67,302 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார். இதனால் 2,59,933 வாக்குகள் பெற்று குமரி மக்களவை தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் சாதனை வெற்றியை பெற்றிருந்தார்.

அதற்கு முன்பு நாங்குனேரி தொகுதியில் எம்.எல்.ஏ.வாகவும் இருந்து வந்தார். வசந்தகுமார். கன்னியாகுமரி தொகுதியில் நகர, கிராமப் பகுதிகளில் பாகுபாடு பார்க்காமல் அரசு நிதியுதவி இன்றி சொந்த செலவிலே மக்களுக்கு உதவி செய்து வந்தார்.

இதனால் அவரது மரணம் அப்பகுதி மக்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

70 வயதான வசந்தகுமார் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் கிராமத்தை சேர்ந்தவர். இவரது தந்தை ஹரிகிருஷ்ணன் நாடார், தாய் தங்கம்மை. மனைவி தமிழ்செல்வி. இவருக்கு விஜய் வசந்த், வினோத்குமார், தங்கமலர் ஆகிய 3 மகன், மகள்கள் உள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குமரி அனந்தன் இவரது சகோதரர் ஆவார். அவரது மகள் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரின் அரிசியல் பாரம்பரியமிக்க குடும்பத்தில் இருந்து வந்தவர் என்ற பெருமை வசந்தகுமாருக்கு உண்டு.

ஆரம்பத்தில், சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனையாளராகப் வேலை செய்து வந்த போது, அவருக்கு வெறும் 70 ரூபாய் தான் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது.

ரேடியோ, பேன் என மாதத் தவணையில் பொருட்களை விற்பனை செய்த அவர், அந்த நிறுவனத்தில் தவணை வசூல் செய்யும் வேலை தான் அவருடையது.

அதிலும், பல கிலோமீற்றர் தூரம் சைக்கிளில் பயணித்து அதை வசூல் செய்வாராம். அவருடைய உழைப்பு அவருக்கு கிளை மேலாளர் பதவியைப் கொடுத்துள்ளது.

ஆனால் அந்த வேலை நிமித்தமாக வெளி மாநிலத்துக்குச் செல்ல வேண்டியிருந்ததால் அந்த வேலையை விட்ட இவர், அதன் பின் மிகச் சிறிய முதலீட்டைக் கொண்டு மளிகைக் கடையை தொடங்கிய அவர் படிப்படியாக முன்னேறி வசந்த் அன் கோ என்ற நிறுவனத்தை நிறுவினார்.

தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, கேரளாவிலும் வசந்த் அன்கோவை நிருவினார். 70-க்கும் மேற்பட்ட கிளைகளை நிறுவி சிறந்த வர்த்தகராக பெயரெடுத்தார்.

தொழிலில் தன்னை அடையாளப்படுத்திய வசந்தகுமார், தனது சகோதரர் குமரி அனந்தனை பின்பற்றி காங்கிரஸின் முக்கிய தலைவராக திகழ்ந்தார்.

நாங்குநேரி தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த அவர் கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

சோனியா, ராகுல் என்று காங்கிரஸ் மேலிடத்தில் மிகுந்த செல்வாக்கு மிக்க தலைவராக வசந்தகுமார் திகழ்ந்து வந்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகளை அரசின் நிதியுதவி இல்லாமலும் சொந்த செலவிலும், செய்து வந்தார்.

கொரோனா பாதிப்பிலும் கூட, கன்னியாகுமரி, அகஸ்தீஸ்வரம், நாகர்கோவில், மார்த்தாண்டம் என்று பல நகர, கிராமப் பகுதிகளுக்கும் சென்று உணவில்லாமல் தவிக்க மக்களுக்கு உணவு பொருட்களை வழங்கி வந்தார்.

இதனால் அவர் கடந்த மாதம் சென்னையில் தங்கி கட்சிப்பணி, மற்றும் வர்த்தகத்தை கவனித்து வந்தார். அப்போது அவர் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அறிந்த காங்கிரஸ் கட்சியினர், மற்றும் மக்கள் அவர் குணம் பெறவேண்டி மும்மத பிரராத்தனையில் ஈடுபட்டனர்.

ஆனால், அவர் உயிரிழந்துவிடவே, அவரது சொந்த கிராமமான அகஸ்தீஸ்வரம் மட்டுமினறி கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்