உயிரிழந்த எம்.பி.வசந்தகுமாரின் உடலை பார்த்து கதறி அழுத நபர்! கமெராவில் சிக்கிய கண்கலங்க வைக்கும் காட்சி

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் உயிரிழந்த வசந்தகுமாரின் உடலைப் பார்த்து காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கதறி அழுத வீடியோ காட்சி வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினருமான எச்.வசந்தகுமார் நேற்று காலமானார்.

அவரின் இறந்த செய்தியைக் கேட்டு கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் தங்கள் ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும், வசந்தகுமாரின் உடல், தியாகராய நகரில் உள்ள அவரின் இல்லத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது.

அவரது உடலுக்கு, வசந்த் அண்ட் கோ நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களும், ஏராளமான பொதுமக்களும், அப்பகுதி வணிகர்களும் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர்.

தலைவா்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்துவதற்காக காமராஜர் அரங்கில் அவரது உடல் வைக்கப்பட்டது. அங்கிருந்து அவரின் உடல் சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீசுவரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இந்நிலையில் வசந்தகுமாரின் உடலைப் பார்த்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

அவர் மிக கஷ்டப்பட்டு முன்னேறியவர், இவரை காமராஜர் போல் பார்த்தோம், கடவுள் தவறு செய்து விட்டோரோ என எண்ண தோன்றுகிறது. அவரது செயல் என்றும் நிலைத்திருக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும், ஆகஸ்ட் 28-ஆம் திகதி கே.எஸ்.அழகிரி வெளியிட்டிருந்த இரங்கல் செய்தியில், தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினருமான திரு எச்.வசந்தகுமார் அவர்கள் காலமான செய்தி கேட்டு கடும் அதிர்ச்சிக்கும், துயரத்திற்கும் ஆளாகியிருக்கிறேன்.

அருமை நண்பர் வசந்தகுமார் மறைவு காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கே பேரிழப்பாகும். பாரம்பரியமிக்க காங்கிரஸ் குடும்பத்தின் வழி வந்த அவர் இளமை பருவம் முதல் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக தம்மையே முழுமையாக அர்பணித்துக்கொண்டவர்.

கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனையாளராக பணியில் சேர்ந்து, தொழில் நுணுக்கங்களை கற்று வசந்த் அன் கோ என்ற நிறுவனத்தை நிறுவி இன்று 82 கிளைகளுடன் விரிவுபடுத்தி தொழில் செய்து வருகிற ஆற்றல்மிக்கவராக அவர் விளங்கினார்.

மிகப்பெரிய தொழிலதிபராக இருந்தாலும் தமது முழு நேரத்தையும் காங்கிரஸ் இயக்கத்தின் மூலமாக மக்கள் தொண்டாற்றுவதற்காக செலவிட்டவர் திரு வசந்தகுமார்.

நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினராக இரு முறையும், கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு மக்களின் அமோக ஆதரவுடன் வெற்றி பெற்றவர்.

தமக்கு வாக்களித்த மக்களுக்கு கொரோனா தொற்று காலத்திலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் செய்வதற்காக தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டவர்.

கொரோனா தொற்று தம்மையும் பாதிக்கும் என்பது குறித்து கடுகளவும் அச்சம் கொள்ளாமல் மக்கள் நலப்பணியில் ஈடுபட்டதன் விளைவாக அதே கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று நம்மிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கிறார்.

அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். திரு எச்.வசந்தகுமார் அவர்களுடைய மறைவின் மூலம் தமிழக காங்கிரஸின் ஒரு தூண் சாய்ந்து விட்டது.

எப்போதும் சிரித்த முகத்துடன் இயக்கப்பணி ஆற்றிவந்த அவர், என் மீது அளவற்ற அன்புகொண்டிருந்த என் உடன்பிறவா சகோதரரை நான் இழந்திருக்கிறேன். நானே மிக கடுமையான துக்கத்தில் இருக்கிறபோது யாருக்கு என்னால் என்ன ஆறுதல் கூறமுடியும்!

தமிழக காங்கிரஸின் அப்பழுக்கற்ற முன்னணி தலைவர்களில் ஒருவரான திரு எச்.வசந்தகுமார் அவர்களது மறைவினால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கனத்த இதயத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஒரு வாரம் துக்கம் கடைபிடிப்பதோடு, கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்துசெய்யப்படுவதோடு, கட்சியின் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என குறிப்பிட்டிருந்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்