அன்றே எச்சரிக்கும் வகையில் பேசிய வசந்தகுமார்! கண்டுகொள்ளாமல் சிரித்த நபர்.. வெளியான வீடியோ காட்சி

Report Print Raju Raju in இந்தியா

மறைந்த வசந்தகுமார் கடந்த மார்ச் மாதத்தில் நாடாளுமன்ற கூட்டத்தில் கொரோனா தொடர்பில் எச்சரிக்கும் வகையில் பேசிய வீடியோ வைரலாகியுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் அதிலிருந்து மீண்ட நிலையிலும் உயிரிழந்தார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் தனது தொகுதியிலும், சென்னையிலும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட நிலையில், வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

கொரோனா தொற்றின் ஆரம்ப காலத்தில் இருந்தே அரசு தடுப்பு நடவடிக்கையில் முழுகவனத்துடன் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தி வந்தார் எம்.பி வசந்தகுமார். கடந்த மார்ச் மாதத்தில் நாடாளுமன்றக் கூட்டத்தில் வசந்தகுமார் கொரோனா பாதிப்பு குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

அந்த வீடியோவில், கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், மத்திய அரசு கொரோனா பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்கவேண்டும்.

ஊரடங்கு விதிக்கப்பட்டதன் மூலம் வருமானம் இல்லாமல் மக்கள் கடன்களை திரும்பச் செலுத்துவதில் சிரமம் அடைந்துள்ளனர். அதனால், தனிநபர்கள் மற்றும் சிறு தொழிலாளர்கள் தங்களது கடன்களை திரும்ப செலுத்த மூன்று மாத கால அவகாசம் வழங்க வேண்டும்.

அதேபோல், தினக்கூலி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு குறைந்தது 2,000 ரூபாய் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினார்.

அப்போது அவர் தொடர்ந்து பேச முயன்றபோது கொடுக்கப்பட்ட நேரம் முடிந்ததாக கூறி அடுத்தவரை பேச சபாநாயகர் அனுமதித்தார். தொடர்ந்து தனக்கு நேரம் வழங்கவேண்டும் என கூறி வசந்தகுமார் பேசியபோது சபாநாயகர் அவரது மைக்கை அணைக்கும் படி கூறி அவரது பேச்சை நிறுத்தியதோடு சிரித்துள்ளார்.

அப்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய எம்.பி வசந்தகுமாரின் பேச்சை அரசு அலட்சியப் படுத்தியதன் விளைவாக அவரே அதனால் பாதிக்கப்பட்டார் என பலரும் கூறி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்