திருநங்கையை திருமணம் செய்வதில் உறுதியாக இருந்த இளைஞன்! எதிர்ப்புக்கு பின் ஏற்பட்ட மகிழ்ச்சியான முடிவு

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் திருநங்கையாக மாறியவரை இளைஞன் ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை ஹரினா (24). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருநங்கையாக மாறினார்.

அதே ஊரைச் சேர்ந்த ஹரினாவின் தாய்மாமா கந்தசாமியின் மகன் கருப்பசாமி (27). இவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். கருப்பசாமி கடந்த 2 ஆண்டாக ஹரினாவை காதலித்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு ஹரினாவை திருமணம் செய்து கொள்ளப்போவதாக தனது பெற்றோரிடம் கருப்பசாமி தெரிவித்துள்ளார். இதற்கு பெற்றோர் முதலில் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் கருப்பசாமி தனது காதலில் உறுதியாக இருந்ததால், திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து கோவிலில் திருநங்கை ஹரினா-கருப்பசாமி திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் குறித்து ஹரினா கூறுகையில், சிறு வயது முதலே உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டது. ஆணாக இருந்தாலும் என்னை ஒரு பெண்ணாக உணர்ந்தேன்.

இந்த நிலையில் என் தாய்மாமன் மகன் கருப்பசாமி என்னை காதலிப்பதாக சொன்னார். திருநங்கைகளிடம் பேசுவதையே அவமரியாதையாக நினைக்கும் இந்த காலத்தில் என்னை காதலிப்பதாக சொன்னதை கேட்டு ஆச்சரியம் அடைந்தேன் என கூறினார்.

கருப்பசாமி கூறுகையில், மிகவும் அன்பாக பேசுபவர் ஹரினா. அமைதி, இரக்க குணம் உடையவர். உழைத்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். ஹரினாவின் மேல் காதல் வந்த போது, திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

திருநங்கையை திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்று பெற்றோரிடம் விருப்பம் தெரிவித்தேன். அதற்கு என் பெற்றோர் கண்டித்தனர். பல நாட்களாக எனது பெற்றோர் என்னிடம் பேசுவதில்லை. உறவினர்களும் என்னை ஏளனமாக பேசினார்கள்.

பிறகு கொஞ்சம் கொஞ்சமாக என் பெற்றோர் மனதை மாற்றி சமாதானப்படுத்தினேன் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்