22 வயது கல்லூரி மாணவியுடன் ஓட்டம் பிடித்த 45 வயது கணவன்! பரிதாபமாக உயிரிழந்த தாய் மற்றும் மகன்கள்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் கணவன் கல்லூரி மாணவியுடன் ஓட்டம் பிடித்ததால், மிகுந்த வேதனையில் இருந்த மனைவி 2 மகன்களை எரித்து கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த வல்லம்பக்காடு பகுதியை சேர்ந்தவர் முத்து (45). விவசாயியான இவருக்கு ராதா(34) என்ற மனைவியும், அபிஷேக்(13) மற்றும் அபிரித்(9) என்ற மகன்களும் உள்ளனர்.

இந்நிலையில் முத்து அறந்தாங்கி ரெத்தினகோட்டையை சேர்ந்த 22 வயதான கல்லூரி மாணவியுடன் முத்து நெருங்கி பழகி வந்துள்ளார்.

இதை அறிந்த மனைவி அவரை கண்டித்துள்ளார். மாணவியின் பெற்றோருக்கும் இந்த விவகாரம் தெரியவர அவர்களும் மாணவியை கண்டித்துள்ளனர்.

இதையடுத்து நேற்று முன் தினம் காலை முத்து வீட்டை விட்டு வெளியேறி மாணவியை அழைத்துக் கொண்டு ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால், இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில், அறந்தாங்கி பொலிசார் முத்து மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். இதற்கிடையே, தனது கணவர், மாணவியுடன் ஓடியதால் அவமானம் தாங்கமுடியாமல் ராதா மனமுடைந்தார்.

இதே வேதனையில், நேற்றுமுன்தினம் இரவு தனது வீட்டில் 2 மகன்களுக்கு தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைத்துள்ளார்.

அதன் பின், ஏற்கனவே வாங்கி வைத்திருந்த பெட்ரோலை 2 பேர் மீதும் ஊற்றி தீ வைத்துள்ளார். பின்னர் தன் மீதும் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீவைத்துக் கொண்டார்.

இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து காப்பாற்ற முயன்றனர். ஆனால், ராதாவும், அபிரித்தும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பலத்த காயமடைந்த அபிஷேக் மற்றும் இவர்களை காப்பாற்ற முயன்று காயம் அடைந்த ஆனந்த், சத்தியமூர்த்தி ஆகியோரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இவர்களில், அபிஷேக் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தான்.

இந்த சம்பவம் குறித்து நாகுடி பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்