காதலித்து திருமணம் செய்த மருமகனை ஆணவக்கொலை செய்த பயங்கரம்! கொடூர சம்பத்தின் முழு பின்னணி

Report Print Santhan in இந்தியா

தெலங்கானாவில் காதல் திருமணம் செய்த இளைஞர் ஆணவக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பெண்ணின் தந்தை மற்றும் தாய்மாமன்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தை சேர்ந்தவர் ஹேமந்த் (29). இவரும், சங்காரெட்டி பகுதியைச் சேர்ந்த அவந்தி (26) என்ற பெண்ணும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இருவரும் வெவ்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் கடந்த ஜுன் மாதம் 11-ஆம் திகதி வீட்டை விட்டு வெளியே இருவரும், சங்காரெட்டி பகுதியில் உள்ள கோயிலில் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்தனர்.

அதன் பின், தங்கள் திருமணத்தை பதிவும் செய்தனர். இதையடுத்து ஹைதராபாத்தில், வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.

இவர்கள் வசித்து வரும் இடத்தை தெரிந்து கொண்ட தாய்மாமன் விஜய், கடந்த ஒரு வாரமாக அவந்தியை போனில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார்.

நேற்று முன்தினம் அவந்தியின் பெற்றோருடன் சமாதானம் பேசி சேர்த்து வைப்பதாக கூறிய தாய் மாமன்கள் விஜய், யுகேந்திரா ஆகியோர், தம்பதியை ரங்காரெட்டி மாவட்டத்திற்கு காரில் அழைத்துச் சென்றுள்ளனர்.

அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த தம்பதியினர், ஓடும் காரில் இருந்து குதித்து தப்பிக்க முயன்றுள்ளனர்.

அப்போது, அவந்தியை அங்கேயே விட்டு விட்டு, ஹேமந்த்தை மட்டும் காரில் ஏற்றிச் செல்ல, உடனே அவந்தி, சங்காரெட்டி காவல்நிலையத்திற்கு சென்று இது குறித்து புகார் அளித்துள்ளார்.

அதன் பின் பேரில், பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். காணமல் போன ஹேமந்தையும் தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை சங்கா ரெட்டி மாவட்டம், நகரம் பகுதியில் ஒரு முட்புதரில் ஹேமந்த் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொடூரமான முறையில் இறந்து கிடப்பது பொலிசாருக்கு தெரியவந்துள்ளது.

உடனடியாக அப்பகுதிக்கு சென்று சடலத்தை மீட்ட பொலிசார், பிரேதபரிசோதனைக்காக சங்காரெட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக அவந்தியின் தந்தை லட்சுமணா, தாய் மாமன்கள் விஜய், யுகேந்திரா உட்பட 12 பேரை பொலிசார் கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்