உத்தரப் பிரதேசத்தில் ராகுல் காந்தி கைது! பிரிவு 188-ன் கீழ் வழக்குப் பதிவு

Report Print Gokulan Gokulan in இந்தியா

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த உத்தரப் பிரதேச இளம் பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக சென்றுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோர் உத்தரப் பிரதேச காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் உத்தரப் பிரதேசத்தின் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த இளம் பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டிருந்தார்.

இதனை மருத்துவமனை அறிக்கைகள் உறுதி செய்திருந்தன. மிகவும் ஆபத்தான சூழலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம் பெண் சிகிச்சை பலனின்றி சமீபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் அவரது உடலை காவல்துறையினர் பெற்றோரிடம் ஒப்படைக்காமல் தகனம் செய்துள்ளனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக தனது சகோதரி பிரியங்காவுடன் இன்று உத்தரப் பிரதேசத்திற்கு சென்றுள்ளார்.

தனது வருகையையொட்டி அம்மாநில காவல் துறையினர் தன்னை தடுத்து நிறுத்தியதாகவும், பின்னர் தன்னை தரையில் தள்ளி, லத்தியால் தாக்கியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.தன்னை கைது ஏன் கைது செய்ய முயல்கிறீர்கள் என்றும், அதற்கான நியாயமான காரணம் என்ன என்றும் ராகுல் காந்தி காவல்துறையினருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கேள்வியெழுப்பியுள்ளார்.

காவல்துறையின் தடுப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த ராகுல் காந்தி, “இந்த நாட்டில் பிரதமர் மோடியை தவிர வேறு யாருக்கும் சாலையில் நடக்க உரிமையில்லையா?” என ஆவேசமாக கேள்வியெழுப்பியுள்ளார்.

முன்னதாக ராகுல் காந்தியினை வருகையையொட்டி உத்தரப் பிரதேச மாநிலத்தில் எல்லைகள் உஷார் படுத்தப்பட்டிருந்தன. மேலும், கொரோனா நெருக்கடியை காரணம் காட்டி, கூட்டம் கூடுவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

இச்சூழலில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரது கார்கள், ஹத்ராஸுக்கு 142 கி.மீக்கு முன்னதாகவே தடுத்து நிறுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவர்கள் காரிலிருந்து இறங்கி காங்கிரஸ் தொண்டர்களுடன் சாலைகளில் நடக்கத் தொடங்கியபோது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினார்.

இதனால் கோபமடைந்த காங்கிரஸ் தொண்டர்கள் உ.பி காவல்துறைக்கு எதிராகவும், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பத் தொடங்கினர்.

தற்போது ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரை உத்தரப் பிரதேச காவல்துறையினரால் பிரிவு 188-ன் கீழ் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்