இந்தியாவில் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் குறித்து வெளிவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் தகவல்கள்!

Report Print Gokulan Gokulan in இந்தியா

இந்தியாவில் தங்களுக்கு எதிரான பாலியல் சுரண்டல் குறித்து பெண்கள் அரிதாகவே வெளியில் தெரிவிக்கின்றனர் என மனித உரிமை கண்காணிப்பு (HRW) என்கிற சர்வதேசிய அமைப்பு சாரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 95 சதவிகிதமான பெண்கள் முறைசாரா தொழில்களில் இருந்து வருகின்றனர். இந்நிலையில், தங்கள் வேலைகளை இழக்க நேரிடும் என்ற அச்சத்தில் பாலியல் துன்புறுத்தல்களை அரிதாகவே தெரிவிக்கின்றனர் என இந்நிறுவனம் கூறியுள்ளது. மனித உரிமை கண்காணிப்பு என்கிற அமைப்பானது அமெரிக்காவின் நியூயார்க் நகரை தளமாக கொண்டு சர்வதேச அளவில் மனித உரிமை குறித்து பல ஆய்வுகளை மேற்கொண்டு பொதுவெளியில் தெரியப்படுத்தி வருகின்றது.

மேற்குறிப்பிட்டதைப்போல் பெண்களில் 95 சதவிகிதமானவர்கள் முறைசாரா தொழிலில் உள்ள நிலையில், அரசு அனைத்து நிறுவனங்களுக்கும் பாலியல் புகார்கள் குறித்த பிரச்னைகளை தீர்க்க குழுக்களை அமைக்க வேண்டுமென சட்டமியற்றியிருந்தது.

2017-ம் ஆண்டு இணையவழியில் பாலியல் புகார்களை பதிவு செய்ய மத்திய அரசு வழிவகுத்ததது. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளில் 600க்கும் அதிகமான புகார்கள் மட்டுமே பதிவாகியுள்ளதாக தெரிய வருகின்றது.

தலைநகர் புதுடெல்லியின் புறநகரில் உள்ள ஒரு தனியார் இல்லத்தில் பணிபுரிந்தபோது பல மாதங்களாக பாதுகாப்புக் காவலரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான ஷாலினி என்ற பணிப்பெண், தனது நிலையில் உள்ள பெண்கள் பேசுவதற்கு மிகவும் பயப்படுவதாகக் கூறியுள்ளார்.

“சில குடும்பங்கள் அந்தப் பெண்ணைக் குறை கூறி அடிக்கத் தொடங்குகின்றன. உங்கள் முதலாளியிடம் நீங்கள் சொன்னால், அவர்கள் உங்களை பணியிலிருந்து வெளியேற்றி விடுவார்கள். காவல்துறை மிக மோசமானது. அவர்கள் உண்மையிலேயே பொருத்தமற்ற கேள்விகளைக் கேட்கிறார்கள், ”என்று ஷாலினி கூறியுள்ளார். இது வெறுமென ஒரே ஒரு பெண்ணினுடைய மனோநிலை என்று எடுத்துக்கொள்ள இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.

காலப்போக்கில் பெண்கள் இந்த பிரச்னைகளை வெகு இயல்பானதாகவும், அதேபோல அதி முக்கியத்துவம் இல்லாதவையாகவும் கையாளுகின்றனர் என்றும் ஷாலினி கூறியுள்ளார்.

இந்தியாவில் சில ஆண்டுகளுக்கு முன்னர் #MeToo இயக்கம் பெருமளவில் பரவியது. இது பல முக்கிய பிரமுகர்களின் மற்றொரு முகத்தை சமூகத்திற்கு வெளிச்சமிட்டு காட்டியது. ஆனால், இது பாலியல் குற்றங்கள் அதிகமாக இருக்கும் தொலைதூர, கிராமப்புறங்களில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என பெண்களின் உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

"#MeToo இயக்கம் வேலையில் வன்முறை மற்றும் துன்புறுத்தல் குறித்து ஒரு வெளிச்சத்தை பிரகாசிக்க உதவியது, ஆனால் இந்தியாவின் முறைசாரா துறையில் உள்ள மில்லியன் கணக்கான பெண்களின் மீதான வன்கொடுமைகள் கண்ணுக்கு தெரியாதவையாக தற்போதும் இருக்கின்றன என்பதை நாம் கவனிக்க வேண்டும்" என்று HRW தெற்காசியா இயக்குநர் மீனாட்சி கங்குலி கூறியுள்ளார்.

மார்தா ஃபாரெல் அறக்கட்டளை, பெண்கள் உரிமைகள் குழு மற்றும் ஆசியா பங்கேற்பு ஆராய்ச்சி (பி.ஆர்.ஐ.ஏ இந்தியா), பாலின சமத்துவத்தை ஆதரிக்கும் ஆராய்ச்சி மையம் ஆகியவை 2018-ல் நடத்திய ஆய்வில், பெண்களுக்கெதிரான குறைதீர்ப்பு குழுக்கள் 655 மாவட்டங்களில் சுமார் 30 சதவீதமான நிறுவனங்கள்தான் அமைத்துள்ளதை என்பதை கண்டறிந்துள்ளது.

பெண்களை மேம்படுத்துவதற்காக சங்கங்கள், சுய உதவிக்குழுக்கள் மற்றும் தொழிற்சங்கங்களை உருவாக்குவதும் மேம்படுத்துவதும் முக்கியம், "இவை பெண்களை வலுப்படுத்தும், இதனால் பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி தைரியமாக புகாரளிக்க முன்வருவார்கள்" என்று முறைசாரா வேலைவாய்ப்பில் உள்ள பெண்களுக்கான உலகமயமாக்கல் மற்றும் ஒழுங்கமைத்தல் (WIEGO) அமைப்பின் இந்திய பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்