கொரோனா தடுப்பூசிக்கான இறுதிக் கட்ட பரிசோதனைகளை இணைந்து மேற்கொள்ளும் இரு நாடுகள்!

Report Print Karthi in இந்தியா

மாஸ்கோ: ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் (ஆர்.டி.ஐ.எஃப்) மற்றும் டாக்டர் ரெட்டீஸ் லேபரேட்டரீஸ் லிமிடெட் இணைந்து ரஷ்யாவின் கோவிட் -19 தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதிப்பதற்கான ஒப்புதலை தற்போது புதுப்பித்துள்ளது.

சர்வதேச அளிவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 4 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கையானது 11 லட்சத்தினை கடந்துள்ளது.

இந்நிலையில் தடுப்பூசிக்கான தேவை நாள்தோறும் அதிகரித்து வருகின்றது. ரஷ்யா ஸ்பூட்னிக் V என்கிற தடுப்பூசியை பரிசோதித்து வருகின்றது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ரஷ்யாவில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகள் அந்நாட்டிலேயே நடைபெற்றதையடுத்து, இந்தியாவில் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனையை மேற்கொள்ள ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் (RDIF) மற்றும் டாக்டர் ரெட்டீஸ் லேபரேட்டரீஸ் லிமிடெட் ஆகிவை தயாராகி வருகின்றன.

தற்போதைய ஒப்பந்தத்தின்படி பரிசோதனைகள் வெற்றிபெற்ற பின்னர் 100 மில்லியன் டோஸ் அளவிற்கான மருந்தினை RDIF இந்தியாவின் நிறுவனமான ரெட்டீஸ்க்கு வழங்கும்.

ரஷ்யா இந்தியாவில் மட்டுமல்லாது, பெலாரஸ், வெனிசுலா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் ஸ்பூட்னிக் V இன் மூன்றாம் கட்ட சோதனைகளை நடத்தி வருகிறது. இதனிடையே 300 மில்லியன் டோஸ் ஷாட் தயாரிக்க இந்திய உற்பத்தியாளர்களுடன் RDIF ஒப்பந்தங்களை ஏற்படுத்த முயன்று வருகின்றது.

இந்நிலையில் 40,000 பங்கேற்பாளர்கள் சம்பந்தப்பட்ட மூன்றாம் கட்ட சோதனை தற்போது மாஸ்கோவில் நடந்து வருகிறது, இதில் 16,000 பேர் ஏற்கனவே இரண்டாவது கட்ட பரிசோதனையில் பங்கேற்றுள்ளனர்.

நவம்பர் தொடக்கத்தில் இடைக்கால முடிவுகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா கொரோனா தொற்று பாதிப்பில் உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்