தமிழக மீனவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டிய இலங்கை ராணுவம்! இது தான் காரணமா?

Report Print Santhan in இந்தியா

கச்சத்தீவு அருகே இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஷ்வர மீனவர்களை இலங்கை இராணுவம் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி திருப்பி அனுப்பியதால், அங்கு பதற்றம் நிலவியது.

தமிழகத்தில் வானிலை எச்சரிக்கை மற்றும் வேலை நிறுத்தங்களால் ராமேஷ்வரம் மீனவர்கள் 15 நாட்களாக மீன்பிடிக்க செல்லாமல் இருந்தனர்.

இந்நிலையில், நேற்று 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3,000-க்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு நேற்று மீன்பிடிக்க சென்றனர்.

அதன் படி, கச்சத்தீவு அருகே பாரம்பரிய மீன்பிடி பகுதியில் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை ராமேஸ்வரம் மீனவர்களை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியது. மேலும் வானை நோக்கி இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் மீன்பிடிக்காமல் உயிர் தப்பினால் போதும் என மீனவர்கள் கரைக்குத் திரும்பியுள்ளனர். இதனால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

இலங்கை கடற்படை இத்தகைய அத்துமீறல்களை அண்மைக்காலமாக நிறுத்தி இருந்தது. இப்போது திடீரென மீண்டும் அட்டூழியத்தில் இலங்கை கடற்படை இறங்கியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. இதனால்தான் இலங்கை ராணுவம் மீண்டும் அத்துமீறலை காட்டத் தொடங்கியிருக்கிறதா? என்ற கேள்வி எழும்பியுள்ளது.

ஏனெனில் இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் நடந்தால் இதேபோல் இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை குறிவைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறது.

கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணி தோற்றால் கூட தமிழக மீனவர்களை தாக்கி ஆத்திரத்தை காட்டுவதும் இலங்கை கடற்படையின் வாடிக்கை. இதனால்தான் முத்தையா முரளிதரன் பட விவகாரத்தால் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை மிரட்டியிருக்கலாம் என்று மீனவர்கள் கூறுகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்