காரில் ஏசி போட்டுவிட்டு தூங்குபவரா நீங்கள்? இது உங்கள் உயிரையே பறிக்கும்

Report Print Karthi in இந்தியா
937Shares

இந்தியாவில் நொய்டாவில் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் காரில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக நீண்ட பயணத்தின்போது கார்களில் உறங்குவதை பலர் வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால், இது மரணத்தை ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தானதா? என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

காரின் எஞ்சினிலிருந்து வெளியிடப்பட்ட விஷ வாயுக்களை - முக்கியமாக கார்பன் மோனாக்சைடு - சுவாசித்ததில் அவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார் என உள்ளூர் செய்திகள் தெரிவித்துள்ளன. ஆனால், இது போன்ற சம்பவங்கள் நடப்பது முதல்முறையல்ல.

2019 ஆம் ஆண்டில், சென்னையில் சாரதி ஒருவர் ஏ.சியை போட்டுவிட்டு தூங்கிக் கொண்டிருந்ததால் உயிரிழந்துள்ளார்.

ஏசி வழியாக காருக்குள் கசிந்த கார்பன் மோனாக்சைடை அவர் சுவாசித்ததால் அந்த நபர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தனது முதல்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளது.

ஒரு இயந்திரத்தின் வெளியேற்றப் புகைகளில் முக்கிய அங்கமாக இருப்பது கார்பன் மோனாக்சைடு மற்றும் பிற விஷ வாயுக்கள். கார்பன் மோனாக்சைடு, மூடிய இடங்களில் பெரிய அளவில் தாக்கத்தினை ஏற்படுத்தும். அடிப்படையில், கார்பன் மோனாக்சைடு உங்கள் இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜனை மாற்றுகிறது, இது மெதுவான ‘மூச்சுத்திணறலை’ ஏற்படுத்துகின்றது.

சென்னையில் ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை வள மையத்தை நடத்தி வரும் ஆலோசகர் ஒவ்வாமை நிபுணர் மற்றும் ஆஸ்துமா நிபுணர் மருத்துவர் சிறிதரன், இவ்வாறான மரணத்திற்கு கீழ்க்கண்ட விளக்கத்தினை அளித்துள்ளார்.

“ஒரு நபர் அதிக அளவு கார்பன் மோனாக்சைடை உள்ளிழுக்கும்போது அது விரைவான மரணத்திற்கு வழிவகுக்கும், ஏனெனில் இரத்த அணுக்கள் திடீரென ஆக்ஸிஜனை வெளியேற்றுகின்றன.”

“உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுவும் செயல்பட ஆக்ஸிஜன் தேவை. கார்பன் மோனாக்சைடை நாம் சுவாசிக்கும்போது, ​​ஹீமோகுளோபினில் உள்ள ஆக்ஸிஜன் கார்பாக்ஸிஹெமோகுளோபினாக மாற்றப்படுகிறது, இது செல்களை பயனற்றதாக மாற்றுகிறது மற்றும் திசுக்களின் செயல்பாட்டைத் தடுக்கிறது. இந்த நிலை ஹைபோக்ஸியா என்று அழைக்கப்படுகிறது.”

“இது சுவாசிக்கும் நபருக்கு கடுமையான தலைவலி, தலைச்சுற்றல் மற்றும் குழப்பத்தை உண்டாக்குவதோடு, மரணத்தையும் ஏற்படுத்துகின்றது. விழித்திருந்து விழிப்புடன் இருந்தால்,

அவர்கள் விரைவாக காருக்கு வெளியே நுழைவதன் மூலம் மரணத்திலிருந்து தப்பிக்க முடியும்.

ஆனால், தூங்கும்போது அல்லது ஆல்கஹால் போதையில் இருக்கும்போது தாங்கள் மரணித்துக்கொண்டிருக்கின்றோம் என்பதை அவர்கள் உணர மாட்டார்கள். அது ஒரு அமைதியான மரணமாக இருக்கும்.”

“இதர வாயுக்கள் அல்லது ஏதேனும் புகைத்தல் ஏற்பட்டால் அதன் மணத்தினை நம்மால் உணர முடியும் ஆனால், இந்த கார்பன் மோனாக்சைடு ஒரு மணமற்ற வாயு. மூடிய இடத்தில் நீங்கள் எவ்வளவு சுவாசிக்கிறீர்கள் என்பதை உணர்வது கடினம்.” என சிறிதரன் கூறியுள்ளார்.

மற்றொரு காரணமாக, ஏ.சி பழைய நிலைமையில் இருப்பது அல்லர் முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பது போன்ற காரணங்களாலும் உயிரிழப்பு ஏற்படுகின்றது என் கூறப்பட்டுள்ளது.

ஏ.சியுடன் ஒருவர் காரில் உறங்கும்போது காரின் ஜன்னல்களை திறந்துவிட வேண்டும் என்றும், நீண்ட தொலைவு பயணித்திற்கு முன்னதாக காரின் ஏ.சி அமைப்பை ஒருமுறை சரிபார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் சிறிதரன் கூறுகிறார்.

இவ்வளவும் செய்வதைக்காட்டிலும், காரை முடிந்த அளவு தவிர்த்து, உணவகங்கள் அல்லது தங்கும் விடுதிகளில் தங்குவதே சிறந்த பாதுகாப்பு நடைமுறையாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்