டெல்லி பல்கலைக்கழக துணை வேந்தர் அதிரடி பணியிடை நீக்கம்! காரணம் இதுதான்

Report Print Karthi in இந்தியா

இந்திய அரசியலில் சில முக்கிய அரசியல் மாற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அதன் ஒரு பகுதியாக தற்போது, டெல்லி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பணியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது பெரும் சலசலப்பினை ஏற்படுத்தியுள்ளது.

தவறான நடத்தை காரணமாக துணை வேந்தரான யோகேஷ் தியாகியை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

கல்வி அமைச்சகம் தியாகி மீது நியமனங்களில் முறைகேடு உள்ளதாகவும், அது குறித்து விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்றும் குடியரசுத் தலைவருக்கு கோரிக்கையை விடுத்திருந்தது. இந்நிலையில் குடியரசுத் தலைவர் அமைச்சகத்தின் கோரிக்கையை ஏற்று தியாகி மீதான நடவடிக்கைக்கு அனுமதியளித்துள்ளார்.

தியாகி மீதான விசாரணை முடியும் வரையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், பேராசிரியர் ஜோஷி இனி துணை வேந்தர் பொறுப்பில் தொடருவார் என்றும் தில்லி பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிய கடிதத்தில் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த ஜூலை 2-ம் திகதி முதல் உடல்நலக் குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் கடந்த வாரம் தியாகி, பேராசிரியர் ஜோஷியை சார்பு துணை வேந்தர் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு பல்கலைக்கழகத்தின் கல்லூரி அல்லாத மகளிர் கல்வி வாரியத்தின் இயக்குநரான கீதா பட்டை அந்த பொறுப்பில் நியமித்தார். இந்த சம்பத்தினையொட்டி பிரச்னை வெடித்தது.

துணை வேந்தர் மற்றும் சார்பு துணை வேந்தர்களுக்கிடையே ஏற்பட்ட இந்த பிரச்னையை மத்திய கல்வி அமைச்சகம் தலையிட்டது. தியாகி விடுப்பில் உள்ளபோது சார்பு துணை வேந்தரை நியமித்தது செல்லாது என அமைச்சகம் கூறியுள்ளது.

இதன் அடிப்படையில் தியாகி டெல்லி பல்கலைக்கழக துணை வேந்தர் பொறுப்பிலிருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்