இது கொடுஞ்செயல்! இலங்கை அரசின் இச்செயலை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்: சீமான் வலியுறுத்தல்

Report Print Basu in இந்தியா
5334Shares

சிங்கள இராணுவத்தால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 121 படகுகள் இலங்கை அரசால் அழிக்கப்படுவதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 121 படகுகளை அழிக்க அந்நாட்டு நீதிமன்றங்கள் ஆணையிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

அப்படகுகளை மீட்டுத் தரக்கோரி தமிழக மீனவர்கள் பன்னெடுங்காலமாகக் கோரிக்கை வைத்துப் போராடி வரும் நிலையில், தற்போது அவற்றை அழித்துத் தகர்க்கிற வேலைகளில் இலங்கை அரசு ஈடுபட்டிருப்பது தமிழக மீனவர்களைப் பெரும் கலக்கத்திற்குள் ஆழ்த்தியிருக்கிறது.

இந்திய வல்லாதிக்கத்தின் காலடியில் இலங்கை உள்ளது. இருந்தும், இந்திய நாட்டின் குடிமக்களான தமிழக மீனவர்களின் துயர்மிகு நிலையைத் துடைத்தெறிய இந்தியாவை ஆளும் ஆட்சியாளர்கள் இதுவரை முன்வரவில்லை.

பல நெருக்கடிகளுக்கிடையில் வங்கியில் கடன்பெற்று உருவாக்கப்பட்ட பல கோடி பணமதிப்புள்ள தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 121 படகுகளை அழிக்க சிங்கள அரசின் நீதிமன்றங்கள் ஆணையிட்டிருப்பது கொடுங்கோல் போக்காகும். இது இந்தியாவின் இறையாண்மையையே அவமதிக்கும் கொடுஞ்செயலாகும்.

ஆகவே, இவ்விவகாரத்தில் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரச்சிக்கலை மனதில் கொண்டு, இலங்கை அரசை கடுமையாகக் கண்டிப்பதுடன் இனிமேலும் காலம் தாழ்த்தாது தமிழக மீனவர்களின் 121 படகுகளையும் மீட்டுவர உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.

அதற்கு தமிழக அரசு உரிய அழுத்தமும், அரசியல் நெருக்கடியும் கொடுத்து தமிழக மீனவர்களின் படகுகளை மீட்டெடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்