முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளனை விடுவிப்பது குறித்து ஆளுநர்தான் முடிவு எடுக்க வேண்டும் என சிபிஐ தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், தன்னை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா, அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த 3-ம் திகதி விசாரணைக்கு வந்தது.
இதனையடுத்து, இந்த வழக்கில் பேரறிவாளன் மற்றும் இந்திய அரசு தரப்பில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய சட்டத்தரணிகளுக்கு அனுமதி அளித்து, வழக்கு விசாரணையை வருகிற 23-ம் திகதிக்கு தள்ளிவைத்தனர்.
இந்நிலையில், பேரறிவாளன் மனு தொடர்பாக சி.பி.ஐ.யின் எம்.டி.எம்.ஏ. அமைப்பின் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் டி.புனிதமணி உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், ராஜீவ் காந்தி கொலை சதியில் பேரறிவாளனின் பங்கை உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் உறுதி செய்துள்ளது.
அவரை விடுவிக்க பரிந்துரைத்த தமிழக அரசின் தீர்மானத்தின் மீதும், அவரது கருணை மனு மீதும் கவர்னர் முடிவு எடுக்காமல் இருப்பதற்கும் சி.பி.ஐ.க்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை தொடர்பான தகவலை கேட்டு எந்தக் கடிதமும் கவர்னர் அலுவலகத்தில் இருந்து வரவில்லை. மேலும் இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை குறித்த தகவலை யாருக்கும் வெளிப்படுத்த முடியாது.
பேரறிவாளனை விடுவிப்பது குறித்து கவர்னர்தான் முடிவு எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.