சசிகலா டிசம்பரில் விடுதலை! சிறைத்துறை தகவல்

Report Print Fathima Fathima in இந்தியா
130Shares

சொத்து குவிப்பு வழக்கு காரணமாக பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா வரும் டிசம்பர் மாதம் விடுதலை செய்யப்படுவார் என்று சிறைத்துறை வட்டாரம் தெரிவித்துள்ளதால், அவரது ஆதரவாளர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது சொத்துகுவிப்பு வழக்கில் கடந்த 2017-ஆம் ஆண்டு

உச்சநீதிமன்றம் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனையும், 10 கோடியே 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது.

இதையடுத்து அதே ஆண்டு பிப்ரவரி 15-ஆம் திகதி சசிகலா உள்ளிட்ட மூவரும் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

மூவரின் தண்டனை காலமும் நிறைவடைய உள்ள நிலையில் 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

சுதாகரன் தரப்பில் கடந்த மாதம் அபராதத் தொகையான 10 கோடியே 10 ஆயிரம் ரூபாயை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது.

கடந்த 18-ஆம் திகதி சசிகலாவின் அபராதமான 10 கோடியே 10 ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டது. இதையடுத்து சிறப்பு நீதிமன்ற பொறுப்பு நீதிபதி கே.சிவராமா சசிகலாவை விடுதலை செய்வதற்கு தடையில்லை என்பதற்கான ஆணையை சிறைத்துறைக்கு வழங்கினார்.

இதைத் தொடர்ந்து சசிகலாவின் தரப்பில் தனக்கு சிறைத்துறை விதிமுறைகளின்படி 126 நாட்கள் சலுகை வழங்க முடியும். எனவே முன்கூட்டியே தன்னை விடுதலை செய்ய வேண்டும் என மனு அளிக்கப்பட்டது.

இதனால், கர்நாடக சிறைத்துறை உயர் அதிகாரிகள் வட்டாரத்தில் சசிகலாவை எப்போது விடுதலை செய்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அப்போது, பெங்களூரு சிறையில் சசிகலா அடைக்கப்பட்ட நாளில் இருந்து கணக்கெடுத்தால் 2021-ஆம் ஆண்டு பெப்ரவரி 14-ஆம் திகதியுடன் 4 ஆண்டுகள் தண்டனை காலம் நிறைவடைகிறது.

இடையில் இரண்டு கட்டங்களாக 17 நாட்கள் மட்டுமே சசிகலா பரோலில் வெளியே வந்துள்ளார்.

அதே போல இறுதி தீர்ப்புக்கு முன் சசிகலா சென்னை மற்றும் பெங்களூரு சிறையில் 35 நாட்கள் இரு கட்டங்களாக சிறை தண்டனை அனுபவித்துள்ளார்.

சிறையில் இருந்த 35 நாட்களில் பரோலில் வெளியே சென்ற 17 நாட்களை கழித்து, 2021 ஜனவரி 27-ல் விடுதலை செய்யலாம் என முன்பு உத்தேசமாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் கர்நாடக சிறைத்துறை விதிமுறையின்படி கைதி சிறையில் இருந்த விடுமுறை தினங்கள் கணக்கிடப்பட்டு, அதில் இருந்தே பரோலில் சென்ற நாட்களை கழிக்க வேண்டும்.

அதன்படி பார்த்தால் கடந்த 4 ஆண்டுகளில் சசிகலா 100க்கும் மேற்பட்ட விடுமுறை நாட்களில் சிறையில் இருந்துள்ளார்.

அந்த நாட்களில் இருந்து பரோலில் சென்ற 17 நாட்களை கழித்தால் ஜனவரி 27-ஆம் திகதிக்கு முன்பே அவரை விடுதலை செய்ய வேண்டும்.

மேலும், சிறை நன்னடத்தை விதிகளின்படி அதனை கணக்கிட்டால் ஒரு மாதம் வரை சலுகை அளிக்க சிறை கண்காணிப்பாளருக்கு அதிகாரம் இருக்கிறது.

சசிகலா சிறையில் இருந்த 35 நாட்கள், சிறையில் கழித்த சுமார் 100 விடுமுறை நாட்கள், கன்னடம் கற்றதற்கு 10 நாட்கள் என கணக்கிட்டால் மொத்தமாக அவர் 2021-ஆம் ஆண்டு பெப்ரவரி 14-ல் இருந்து 145 நாட்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டு இருக்க வேண்டும்.

இதன் படி பார்த்தால் டிசம்பரில் அவரை விடுதலை செய்யலாம் என முடிவெடுக்கப்பட்டதாக சிறைத்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

சசிகலாவின் வழக்கறிஞர் நாளை சென்னை சிறையில் இருந்ததற்கான ஆதாரங்களை பரப்பன அக்ரஹாரா சிறையில் தாக்கல் செய்ய இருக்கிறார்.

அதன் அடிப்படையாக வைத்து கர்நாடக சிறைத்துறை சசிகலாவின் விடுதலை திகதியை இறுதி செய்யும் என கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்