இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த இளம் மருத்துவர் ஒருவர் கொரோனாவால் நுரையீரல் பாதிக்கப்படு, நிவர் புயலால் சிகிச்சை கிடைக்காமல் பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் போபால் பகுதியை சேர்ந்தவர் 26 வயதான சுபம் உபாத்யாய்.
போபாலில் உள்ள புந்தேல்கண்ட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
ஒப்பந்த அடிப்படையில் அங்கு மருத்துவராக பணியாற்றி வரும் உபாத்யாய்க்கு கடந்த மாதம் 28ம் திகதி கொரோனா பாதிப்பு இருப்பது சோதனையில் தெரியவந்தது.
இதையடுத்து தான் வேலை பார்க்கும் மருத்துவமனையிலேயே அவர் சிகிச்சையும் பெற்று வந்தார்.
ஆனால் நாளாக அவரின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இதனால் 15 நாட்களுக்கு முன்பு சிராயு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு நடந்த பலகட்ட சோதனையில், கொரோனா வைரஸ் உபாத்யாய்யின் நுரையீரலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பது தெரியவந்தது.
மேலும் உடனடியாக அவருக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அதற்கு ஏற்பாடும் செய்யப்பட்டது. அதன்படி, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தமிழகத்தின் சென்னையில் நடக்க இருந்தது.
இதையடுத்து உபாத்யாய்யை சென்னைக்கு விமானத்தில் கொண்டு வர உறவினர்களால் திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நிவர் புயலால் சென்னைக்கு வர வேண்டிய விமானங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டதால் மருத்துவரை சென்னை அழைத்து வர முடியாமல் போனது.
இதன் காரணமாக, நேற்று உபாத்யாய் பரிதாபமாக மரணமடைந்தார். உபாத்யாய் கடந்த சில மாதங்களாக கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வந்தார். அதனால் தான் அவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.
இவரின் மரணம் தொடர்பாக சிராயு மருத்துவமனை மருத்துவர் அஜய் கோயங்கா தெரிவிக்கையில், மருத்துவர் சுபம் உபாத்யாயா கொரோனா வைரஸ் தொற்றால் நுரையீரல் 100 சதவீதம் பாதிக்கப்பட்டு நவம்பர் 10 முதல் இங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னை அழைத்துச் சென்றிருந்தால் சுபம் இந்நேரம் உயிரோடு இருந்திருப்பார் என தெரிவித்துள்ளார்.