சாலையில் கொழுந்துவிட்டெரிந்த பயணிகள் பேருந்து: பகீர் கிளப்பிய சம்பவத்தின் முழு பின்னணி

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் தாழ்வாக கிடந்த மின்கம்பி மீது உரசியதால் பேருந்து ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது.

குறித்த தீவிபத்தில் பயணிகள் மூவர் உடல் கருகி பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள டெல்லி-ஜெய்ப்பூர் தேசிய நெடுச்சாலையில் இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது.

ஜெய்ப்பூர் மாவட்டம் அன்ஞ்ரோல் என்ற பகுதியில் உள்ள நெடுச்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது தாழ்வாக கிடந்த மின் கம்பி மீது பேருந்து உரசியது.

இதனால், பேருந்து திடீரென தீப்பற்றியது. பேருந்தின் மேற்பரப்பில் தீ பற்றியதை கவனிக்காத சாரதி தொடர்ந்து பேருந்தை இயக்கியுள்ளார். மளமளவென பரவிய தீ பேருந்து முழுவதும் பரவியது.

இதனால் அதிர்ச்சியடைந்த சாரதி பேருந்தை உடனடியாக நிறுத்தியுள்ளார். இதனிடையே தீ பற்றியதை கவனித்த பயணிகள் அலறியடித்து பேருந்தில் இருந்து வெளியேறினர்.

இருப்பினும், இந்த தீ விபத்தில் சிக்கி பயணிகளில் 3 பேர் உடல் கருகி பரிதாபமாக மரணமடைந்துள்ளனர்.

மேலும், பலர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேலும், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை முன்னெடுத்து வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்