13 வயது சிறுமியை 400 பேர் சீரழித்த கொடூரம்! ஒரு குடும்பமே பலருக்கு விருந்தாக்கிய பயங்கரம்: முழு பின்னணி

Report Print Santhan in இந்தியா
5434Shares

இந்தியாவின் தமிழகத்தில் 13 வயது சிறுமியை 400 பேர் சீரழித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின், சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் கணவனை இழந்த பெண் ஒருவர் தனது 13 வயது சிறுமி உடன் தனியாக வசித்து வருகிறார்.

தன் தாய் உடல் நலம் குன்றி இருப்பதால், சிறுமி, வியாசர்பாடி சிக்னலில் பேனா, பென்சில், வாய்ப்பாடு, போன்ற பொருட்களை விற்று தன் தாயை காப்பாற்றி வந்துள்ளார்.

சிறுமியின் தாயின் அக்கா மகளான ஷாகிதா பானு என்பவர் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்த நிலையில் வேடியை சேர்ந்த மதன்குமார் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஷாகிதா பானு தனக்கு உடல்நிலை சரியில்லை எனவும் அதனால் தனக்கு உதவியாக தங்கையை அனுப்பி வைக்குமாறும் சிறுமியின் தாயாரிடம் கேட்டுள்ளார். இதையடுத்து சிறுமியும், தனது பெரியம்மாவின் மகளான ஷாகிதா பானுவின் வீட்டுக்குசென்றுள்ளார்.

2 மாதங்களாகியும் சகோதரி வீட்டுக்கு சென்ற மகள் திரும்பி வராததால், மதன் குமாரிடம் தனது மகளை திருப்பி அனுப்புமாறு சிறுமியின் தாய் கேட்டுள்ளார்.

ஆனால் மதன்குமாரும் அவரது மனைவியுமான ஷாகிதா பானுவும் மறுக்க, சிறுமியின் தாய் நேரில் சென்று சண்டையிட்டு சிறுமியை அழைத்து வந்துள்ளார்.

வீட்டுக்கு வந்த சிறுமியின் செயலில் மாற்றம் தெரியவே சிறுமியின் தாயார் விசாரித்துள்ளார்.

அப்போது சிறுமியின் அக்காவான ஷாகிதா பானுவும், அக்காவின் கணவரான மதன்குமாரும் சிறுமியை மிரட்டி பாலியல் தொழிலில் தள்ளியது தாய்க்கு தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் உடனடியாக கடந்த 10-ஆம் திகதி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணை மேற்கொண்ட பொலிசார் சிறுமியை பணத்திற்காக பெரியம்மாவின் மகளும் அவரது கணவரும் பாலியல் தொழிலில் தள்ளியது தெரியவந்தது.

இதையடுத்து ஷாகிதா பானு மற்றும் அவரது கணவர் மதன் குமார் ஆகியோரை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது, .ஷாகிதா பானு அவரது கணவர் மதன்குமார் மற்றும் மதன் குமாரின் தங்கை சந்தியா ஆகியோர் சிறுமியை மிரட்டி பாலியல் தொழில் பயிற்சி கொடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது.

மேலும் மதன் குமாரின் நண்பர்கள் மற்றும் மதன் குமாரின் சகோதரியான சந்தியாவின் நண்பர்கள் என மாறிமாறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததும், ஒரு குடும்பமே இதன் மூலம் பணம் சம்பாதித்து வந்ததும் அம்பலமானது.

இந்த வழக்கில் கடந்த 12-ஆம் திகதி சிறுமியின் அக்காவான ஷாகிதாபானு, மதன்குமார், மதன் குமாரின் தங்கை சந்தியா, செல்வி, மகேஸ்வரி, வனிதா, விஜயா, கார்த்தி ஆகிய 8 பேரை கைது செய்த பொலிசார் போக்சோ சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி பொலிசார் ஒருவர் மதுபோதையில் தன்னை அழைத்து பாலியல் வன்கொடுமை செய்து கொடுமைப்படுத்தியதாக கூறியதையடுத்து பொலிசார் மீண்டும் விசாரணையில் இறங்கியிருக்கும் நிலையில், தற்போது மேலும் அதிர்ச்சி தரும் தகவலாக, குறித்த சிறுமியை 400 பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிவந்துள்ளது

இதில், பாஜக பிரமுகர், காவல் ஆய்வாளர், அரசு அதிகாரிகள் உள்பட பலருக்கும் தொடர்பு இருப்பதாகவும் இவர்களில் 15 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர்களின் பட்டியலை 5 காவல் ஆய்வாளர்கள் தயாரித்து வருவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்