சசிகலா வரும் தேர்தலில் போட்டியிடுவார்! ஆனால் இதில் வெற்றி கிடைக்கனும்: தினகரன் அதிகாரப்பூர்வ பேட்டி

Report Print Santhan in இந்தியா
0Shares

சசிகலா தேர்தலில் போட்டியிடுவது குறித்து சட்ட ரீதியாக சில முயற்சிகளை செய்து வருவதாகவும், அதில் சாதகமான முடிவு வந்தால், அவர் நிச்சயம் போட்டியிடுவார் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனைக்கு பின், சமீபத்தில் தான் தமிழகம் திரும்பினார்.

சசிகலாவின் வருகை தமிழக அரசியலில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் இன்று திருமண விழாவில் பங்கேற்ற அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, பிரதமர் மோடி தமிழகத்துக்கு சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். அதனால் அவர் தமிழகத்துக்கு வருகை புரிவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை.

அதிமுகவினர் பேசும் பேச்சுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அம்மாவின் தொண்டர்கள் இருப்பதுதான் அமமுகவில்தான். இந்த இயக்கம் மட்டும்தான் முதல் அணி. இதில் மூன்றாவது, நான்காவது அணி எல்லாம் இல்லை.

என் மீது குற்றம் கண்டுபிடிப்பதற்காகவே ஒரு கும்பல் இருக்கிறது. அதற்கெல்லாம் நான் கருத்து சொல்ல முடியாது. எங்களது இலக்கு என்பது அம்மாவுடைய ஆட்சியைக் கொண்டு வந்து மக்களுக்குச் சேவை செய்வதுதான்.

சசிகலா உறவினர்களின் சொத்துகள் அரசுடமையாக்கப்படுகின்றன என்று கேட்கிறார்கள். அது சுதாகரன் சொத்தோ, இளவரசி சொத்தோ கிடையாது. அது கம்பெனி சொத்து. நீதிமன்ற உத்தரவுப்படி நடக்கிறது.

சசிகலா தேர்தலில் போட்டியிடுவது குறித்து சட்ட ரீதியாக சில முயற்சிகளைச் செய்து கொண்டுள்ளோம். அதில் வெற்றி பெற்றவுடன் அவர் போட்டியிடுவார். சசிகலா போட்டியிட வேண்டும் என்பதுதான் எனது விருப்பம் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்