ஸ்வீடனின் கிரேட்டா தன்பெர்க் பகிர்ந்த டூல்கிட்... சதி செய்ததாக இந்திய இளம் பெண் கைது: முழு பின்னணி

Report Print Arbin Arbin in இந்தியா
0Shares

இந்தியாவில் விவசாயிகள் போராட்ட வன்முறை விவகாரத்தில் சதி செய்த குற்றச்சாட்டில் 22 வயது பெண் சுற்றுச்சூழல் ஆர்வலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்திய அரசின் 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இவர்களுக்கு ஆதரவாக ஸ்வீடனின் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் தமது டுவிட்டர் பக்கத்தில் சர்வதேச பத்திரிகை ஒன்று வெளியிட்ட செய்தியை பகிர்ந்தார்.

அத்துடன், விவசாயிகள் போராட்டத்தின் அடுத்த நகர்வுகள் என்ன என்பது தொடர்பிலான டூல்கிட் எனும் தொகுப்பு ஒன்றையும் அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்ததுடன், சர்வதேச சமூகம் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

கிரேட்டா தன்பெர்க் பகிர்ந்த அந்த டூல்கிட்டை தொகுத்தவர் பெங்களூருவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரும் கல்லூரி மாணவியுமான திஷா ரவி என கூறப்படுகிறது.

மட்டுமின்றி, விவசாயிகளுக்கு ஆதரவாக அந்த டூல்கிட்டை தமது டுவிட்டர் பக்கத்திலும் திஷா ரவி பகிர்ந்துள்ளார்.

விவசாயிகள் போராட்டம் என்பது இந்தியா மீது போர்தொடுக்க காலிஸ்தான் பயங்கரவாதிகளால் பின்னப்பட்ட சதி என ஆளும் மோடி அரசின் ஆதரவாளர்கள் பலர் கூறி வரும் நிலையில்,

விவசாயிகளுக்கு ஆதரவாக, அவர்களின் போராட்டம் தொடர்பில் அடுத்தகட்ட நகர்வுகளை முடிவு செய்யும் டூல்கிட்டை உருவாக்கியவர் என்பதால், அது இந்தியாவுக்கு எதிரான சதி என கூறி தற்போது திஷா ரவி கைதாகியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி பொலிசார் முன்னெடுத்த விசாரணையில் திஷா ரவியும் ஒரு எடிட்டராக இருந்ததாக தெரியவந்துள்ளது.

இதனால் டெல்லி பொலிசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் ஐந்து நாட்கள் காவல்துறை விசாரணைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து திஷா ரவி கூறுகையில், நான் டூல்கிட்டை உருவாக்கவில்லை. நாங்கள் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்க விரும்பினோம். பிப்ரவரி 3ம் திகதி இரண்டு வரிகளை மட்டுமே நான் திருத்தம் செய்தேன் என்றார்.

டூல்கிட் எடிட்டராக இருந்து கொண்டு, இந்தியாவுக்கு எதிரான கருத்தை உருவாக்குதல் மற்றும் பரப்புதலில் முக்கிய சதிகாரராக திஷா ரவி இருந்துள்ளார் என பொலிஸ் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

திஷா ரவி கைதான விவகாரம் தற்போது இந்தியா முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன்,

சமூக ஊடக பக்கங்களில் திஷா ரவியை விடுவிக்கவும், அவருக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்