ஜெயலலிதாவின் மரணத்திற்கு பதிலடி கொடுப்பார்: பாத்திமா பாபு பேட்டி

Report Print Meenakshi in நேர்காணல்
500Shares
500Shares
ibctamil.com

தமிழக அரசியல் வரலாற்றில் மீண்டுமொருமுறை சுக்கல் சுக்கலாகப் பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க அணிகளுக்குள் கோட்டையைப் பிடிப்பது யார் என்கிற அரசியல் சதுரங்க விளையாட்டு சூடு பிடித்திருக்கிறது.

காளைகள் பிரிந்தால், நரிகளுக்கு கொண்டாட்டம் என்பதைப்போல் இன்னொரு பக்கம் தமிழக அரசியல் களத்தையே வேரோடு அழிக்கும் முயற்சியில் சிலர் மும்முரமாகியுள்ளனர். நாற்காலி ஆசையின் விளைவு, ஆர்.கே.நகரில் பணமழை.

அதனால் மாட்டிக் கொண்டு திண்டாடும் தலைகள் என்று அரசியல் களத்தில் இரட்டை இலை ஊசலாடிக்கொண்டிருக்கிறது. நடுநடுவே ‘அணிகள் ஒன்றாகும் நாள் இதுவே’ என்று இறக்கை கட்டிப் பறக்கும் செய்திகள் வேறு.

‘இந்த பரபரப்புகள் பற்றி உங்கள் பார்வை என்ன?’ என்று திருமதி.பாத்திமா பாபு அவர்களை ஃபோனில் பேட்டிக்காகத் தொடர்பு கொண்டோம்.

“அதிமுகவின் அரசியல் நகர்வுகள் எதை எடுத்துக்காட்டுகின்றன?”

“தர்மம் ஒருநாள் வெல்லும் என்பதைத்தான் காட்டுகின்றது. அதிமுகவிலும் அது விரைவில் சாத்தியமாகும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தாலும், அவர்களுடைய சக்தி இன்னும் நம்மிடையே இருந்து கொண்டுதான் இருக்கிறது. இந்தப் பிளவுகள், பரபரப்புகளுக்கு சரியான தீர்வினைத் தரும்.”

“இவர்களுக்குள் எது உண்மையான அதிமுக அணி என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?”

“ஓ.பி.எஸ் அவர்களின் அணிதான் உண்மையான அதிமுக அணி என்று நான் நம்புகிறேன். எம்.ஜி.ஆர் அவர்கள் இந்த கட்சியைத் துவங்கியபோது பொதுவுடமைக் கொள்கைகளுடன் தான் துவங்கினார். அதற்கப்புறம் சட்டப்பிரிவுகள் வரையறுக்கப்பட்டு, ஒரு பொதுச்செயலாளர் மறைவிற்கு பின்பு அவரால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளே கட்சியின் தலைமையையும், பொதுச்செயலாளர் பதவியையும் நியமிக்க வேண்டும் என்கிற நியமனம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

கட்சியின் அடிப்படைத் தொண்டர்களின் ஆதரவு இருப்பவர்களால் மட்டுமே, கட்சி நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அந்த வகையில் பார்த்தால் பொருளாளரான ஓ.பி.எஸ்சும், அவைத்தலைவரான மதுசூதனனும் மட்டுமே அம்மாவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.

ஆனால், மற்றொரு அணியில் ஒருவர் தனக்குத்தானே பொதுச்செயலாளராக அறிவித்துக் கொண்டது செல்லாது. அவரால் நியமிக்கப்பட்ட மற்றவர்களின் பதவிகளும் செல்லாது. எனவே, தினகரனின் பதவி நீக்கப்பட வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் பரிசீலினை செய்ய வேண்டும். யார் வேண்டுமானாலும் பதவியேற்கட்டும். ஆனால், அவர்கள் கட்சியின் அடிப்படைத் தொண்டர்களின் முழு ஆதரவுடன் தேர்வு செய்யப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.”

“ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்தானதற்கு முக்கிய காரணம் ஓட்டுக்குப் பணம். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“என்னதான் பணத்தை அள்ளி வீசினாலும், மக்கள் தாங்கள் விரும்புகின்ற ஒரு தலைமைக்கே ஓட்டளிப்பார்கள். அது மக்களின் வரிப்பணம்தான். அவர்களுக்குச் சேர வேண்டியதே. அது மக்களுக்குச் சொந்தமான பணம், அதை அவர்கள் பெற்றுக் கொள்வதில் தவறில்லை. அவர்கள் பாவப்பட்ட ஜனங்கள்.

அவர்களுடைய வியர்வை சிந்தி உழைத்த உழைப்பின் ஒருபகுதியைத்தான் அவர்கள் பெற்றுக் கொள்கிறார்கள். அத்தனை கட்சியும்தான் பணம் கொடுக்கிறார்கள். ஆனாலும், மக்கள் அவர்களுக்கு யார் சரியாகத் தோன்றுகிறார்களோ அவர்களுக்குத்தான் ஓட்டு போடுவார்கள். ஒருவகையில் இங்கு நடந்திருப்பது தேர்தலை நிறுத்தவேண்டும் என்கிற சூழ்ச்சிதான்.

மக்களுக்கும், மற்ற கட்சிகளுக்கும் தெரியும் வகையில் பணத்தை வாரியிறைத்து, தன்னுடைய தோல்வியைத் தள்ளிப் போட்டிருக்கிறார் தினகரன். தோல்வி பயத்தால், தேர்தலை நிறுத்தும் கண்ணோட்டத்தையே இது காட்டுகிறது.”

“மாநில முதல்வர் ஒருவரின் மரணத்தைச் சுற்றி சர்ச்சைகள் சுழலும்போது, அதை பிரதமர் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்?”

“நடிகரான கலாபவன் மணியின் மரணத்தில் இருக்கும் மர்மங்களை அறிய சி.பி.ஐ விசாரணை தேவை என்று கேட்டது கேரள அரசு. அப்படி இருக்கும்போது, ஒரு மாநில முதல்வரே சர்ச்சைக்குரிய வகையில் இறப்பைத் தழுவியிருக்கிறார் என்பதை மத்திய அரசு பார்த்துக் கொண்டு சும்மா இருக்குமா? கண்டிப்பாக பிரதமர் மோடிக்கு இதைப்பற்றிய கவனம் இருக்கும்.

அவர் அமைதியாக இருக்கிறார் என்றால், பின்னணியில் மிகப்பெரிய விசாரணைக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றார் என்றுதான் அர்த்தம். மறைந்த ஜெயலலிதா அவர்களுடன், சிறந்த முறையில் நட்பு பாராட்டியவர் பிரதமர் மோடி. அவர் தன்னுடைய தோழியின் மரணத்தைச் சாதாரணமாக எடுத்துக் கொண்டிருக்கமாட்டார்.

நிச்சயமாக பதிலடி உண்டு. அதற்கான மரண அடியாகத்தான் சசிகலா மற்றும் குடும்பத்தினர் மீதான தற்போதைய நடவடிக்கைகள் என்று நான் நினைக்கிறேன்.”

- Vikatan

மேலும் நேர்காணல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments