எங்களை விட்டுவிடுங்கள்: துபாய்க்கு வேலைக்கு சென்ற தமிழர்களின் பரிதாப நிலை

Report Print Raju Raju in மத்திய கிழக்கு நாடுகள்

தமிழ்நாட்டின் புதுக்கோட்டையில் இருந்து துபாய்க்கு வேலைக்கு சென்ற இளைஞர்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

ராஜாக்கண்ணு மற்றும் சிவக்குமார் ஆகிய இரண்டு இளைஞர்கள் கடந்தண்டு மார்ச் மாதம் துபாயில் உள்ள ரோஷினி எலக்ட்ரோ மெக்கானிக்கல் ஒர்க்ஸ் என்ற நிறுவனத்துக்கு கொத்தனார் வேலைக்கு வந்தனர்.

இந்த வேலைக்காக இருவரும் தலா 70,000 ரூபாயை கட்டினர்.

இவர்களுக்கு கம்பி கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு வேலைகள் கொடுக்கப்பட்ட நிலையில் அனைத்து வேலைகளையும் அவர்களால் செய்ய முடியவில்லை.

எனவே நிர்வாகத்திடம் தங்களுக்கு வேலை கடினமாக உள்ளது எனவும் சொந்த ஊருக்கே திருப்பி அனுப்புமாறும் ராஜாக்கண்ணுவும், சிவக்குமார் கெஞ்சியுள்ளனர்.

ஆனால் இதற்கு ஒத்து கொள்ளாத நிர்வாகம் இருவரையும் அடித்து வேலை வாங்கியுள்ளது.

இதுகுறித்து இருவரும் ஊரில் உள்ள தங்களது பெற்றோருக்கு தகவல் கொடுத்த நிலையில் அவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரை தொடர்ந்து துபாய் இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் குறித்த நிறுவனத்திடம் விசாரித்த நிலையில் ராஜாக்கண்ணுவும், சிவக்குமாரும் தங்களது நிறுவனத்தில் இருந்து ஓடிவிட்டனர் என நிர்வாகத்தினர் புகார் அளித்துள்ளனர்.

இதன் காரணமாக இரண்டு பேரும் கடந்த மூன்று மாதங்களாக தங்க இடமில்லாமல் நண்பர்களின் உதவியுடன் வசித்து வருவதோடு, உணவுக்காகவும் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

இருவரும் பொலிஸ், தொழிலாளர் நலத்துறை, இந்திய துணைத் தூதரகம் என பல்வேறு அலுவலகங்களுக்கும் நடையாய் நடந்து வருகின்றனர்.

மேலும், தங்களை விரைவாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு இந்திய துணை தூதரகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்