தங்கத்தாலான பிறந்தநாள் கேக்கை கேரள வெள்ள நிவாரணத்துக்கு அளித்த சிறுமி: குவியும் பாராட்டு

Report Print Arbin Arbin in மத்திய கிழக்கு நாடுகள்

ஐக்கிய அமீரகத்தின் துபாயில் பிறந்தநாள் பரிசாக மகளுக்கு தந்தை அளித்த ரூ.19 லட்சம் மதிப்புள்ள ‘தங்க கேக்’ கேரள வெள்ள நிவாரணத்துக்காக வழங்கப்பட்டுள்ளது.

துபாயில் சொந்தமாக கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வருபவர் விவேக் கல்லிதில். இவருக்கு ஒரே பிரசவத்தில் பிறந்த 3 பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் மூவரும் துபாயில் உள்ள டெல்லி தனியார் பாடசாலை ஒன்றில் படித்து வருகிறார்கள்.

ஆண்டு தோறும் தமது மகள்களுக்கு பிறந்தநாளின்போது ஆளுக்கு ஒரு கேக் பரிசாக வழங்குவதை விவேக் தொடர்ந்து செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் இந்த ஆண்டு 12-வது பிறந்தநாளை கொண்டாடும் தமது மகள்கள் மூவருக்கும் ஆளுக்கு ஒரு தங்கத்தாலான கேக்கை விவேக் பரிசாக அளித்துள்ளார்.

சுமார் 500 கிராம் எடை கொண்ட இந்த தங்கத்தாலான கேக்கானது துபாயில் உள்ள மலபார் கோல்டு அண்ட் டயமண்ட் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டதாகும்.

22 காரட் ஆபரணத்தங்கத்தில் கைவினை கலைஞர்களால் உருவாக்கப்பட்ட இந்த தங்க கேக்கின் மேற்புறத்தில் உள்ள மலர் வடிவம் துருக்கியில் இருந்து வரவழைக்கப்பட்டதாகும். அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த இந்த ‘கேக்’ இந்திய மதிப்பில் ரூ.19 லட்சம் என கூறப்படுகிறது.

கேரள பெருவெள்ளம் தொடர்பில் ஆர்வத்துடன் கேட்டு தெரிந்துகொள்ளும் தமது மகள் பிரணதி தாமும் வெள்ள நிவாரணத்திற்கு உதவி செய்ய வேண்டும் என தந்தையிடம் கூறியுள்ளார்.

தந்தையும், தமது நிறுவனம் சார்பில் அளிக்கவிருக்கும் பொருட்களுடன் அதையும் அனுப்பி விக்கலாம் என மகளிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால் தமது அறைக்கு சென்று திரும்பியவர் தந்தை பரிசாக அளித்த தங்க கேக்குடன் திரும்பியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மகளின் உதவும் நோக்கத்தை பார்த்து வியந்த விவேக் கல்லிதில் உடனடியாக அந்த ‘தங்க கேக்’கை பணமாக மாற்றி கேரள முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு அனுப்பிவைத்துள்ளார்.

வீட்டின் அலமாரியில் வெறுமனே அலங்கார பொருளாக ‘தங்க கேக்’ இருப்பதை விட துயரத்தில் தத்தளிக்கும் சிலரது கண்ணீரை அது துடைத்தால் அதன் மதிப்பு அதிகம் என சிறுமி பிரணதி தெரிவித்துள்ளார்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்